Sports

ஆசிய விளையாட்டு போட்டி : மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்தியா.. இலங்கையை வீழ்த்தி அசத்தல் !

ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.கடந்த 2018-ம் ஆண்டு 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்தது.அந்த வகையில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் நேற்று தொடங்கிய நிலையில், வரும் அக்டோபர் எட்டாம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது.

பொதுவாக ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் இடம்பெறாத நிலையில், இந்த தொடரில் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்திய அணிக்கு பதக்கம் கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது.

இந்த நிலையில், இந்த தொடரில் பங்கேற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தனது பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி நேரடியாக காலிறுதியில் மலேசிய அணியை சந்தித்தது. அது மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், தரவரிசையில் முன்னிலையில் இருந்ததால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

அதன் படி நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதே போல மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்னர் ஆடிய இந்தியா அணி, 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் குவித்தது. 118 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இலங்கை அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால், 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இலங்கை அணி வெள்ளிப்பதக்கத்தை வெல்ல, வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில், வங்கதேச அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

Also Read: இஸ்லாமிய மாணவரை தாக்க கூறிய ஆசிரியை.. உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா? உ.பி அரசுக்கு நீதிமன்றம் கேள்வி !