Sports

"இவங்க பந்துவீச மாட்டாங்க, அவங்க பேட்டிங் செய்ய மாட்டாங்க" -இந்திய அணியை விமர்சித்த இங்கிலாந்து வீரர் !

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அணிக்கு கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், பும்ரா ஆகியோர் திரும்பியதால் இந்திய அணி தற்போது வலுவுடன் காட்சியளிக்கிறது. அதே நேரம் பின்வரிசை வீரர்கள் பேட்டிங் செய்ய முடியாமல் விரைவு கதியில் ஆட்டமிழப்பது அணியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய அணியில் போதிய ஆல்-ரௌண்டர்கள் இல்லாதது இந்திய அணிக்கு உலகக்கோப்பை தொடரில் பாதகமாக அமையும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " இந்திய அணியில், ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி என தலைசிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் சுப்மன் கில், பும்ரா போன்ற வீரர்கள் இணைந்திருப்பது பலத்தை சேர்க்கிறது.

ஆனால், இந்திய அணியில் போதிய ஹர்திக் பாண்டியாயை தவிர போதிய ஆல்-ரௌண்டர் இல்லாதது அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும். இந்திய அணியின் பந்துவீச்சாளர்களால் பேட்டிங் செய்ய முடியாது. பேட்ஸ்மேன்களால் பந்துவீச முடியாது. இது ஆஸ்திரேலியா , இங்கிலாந்து அணிகளில் இருந்து இந்தியாவை தனித்து காட்டுகிறது. இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். ஆனால், நாக் அவுட் போட்டிகளில் எப்படி விளையாடப்போகிறது என்பது தான் பெரிய கேள்வி. வரும் உலகக்கோப்பையில் இந்திய அணி அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Also Read: "பாகிஸ்தான் வீரர்கள் தோல்வி பயம் பிடித்து ஆடினர்" -பாக். வாரிய முன்னாள் தலைவர் விமர்சனம் !