Sports

உலகக்கோப்பை நடக்கும் மைதானத்தில் அதிகளவில் பூஞ்சைகள்.. கண்டுபிடித்து புகாரளித்த ICC.. சிக்கலில் BCCI !

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.

முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. அதேபோல் இறுதிப்போட்டியும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது. அதோடு முக்கியமாக இந்தியா-பாகிஸ்தான் மோதலும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது.இந்த தொடரில் இந்தியா ஆடும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த உலகக்கோப்பை தொடர் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலகக்கோப்பைக்கான மைதானங்கள் குறித்து ஐசிசி-யின் ஆய்வு குழு இந்தியா வந்து ஆய்வினை நடத்திவருகிறது.

அதில் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் சோதனை நடத்தியபோது அங்கிருந்து புற்களில் அதிகளவில் பூஞ்சைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாக பிசிசிஐ-க்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பதறிய பிசிசிஐ அதிகாரிகள் விரைவில் இந்த பிரச்சனைகள் சரிசெய்யப்படும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 20ஆம் தேதி தரம்சாலா மைதானத்தில் மீண்டும் சோதனை நடத்தப்படவுள நிலையில், அதிலும் இந்த பிரச்சனை தொடர்ந்தால் அந்த மைதானத்தில் உலகக்கோப்பை நடத்த ஐசிசி தடை விதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இக்கட்டான நிலையில், பிசிசிஐ சிக்கியுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஆன போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "இவங்க பந்துவீச மாட்டாங்க, அவங்க பேட்டிங் செய்ய மாட்டாங்க" -இந்திய அணியை விமர்சித்த இங்கிலாந்து வீரர் !