Sports

இந்தியா-பாகிஸ்தான் மோதல் : ரசிகர்கள் வராததற்கு இதுதான் காரணம் ! - முரளிதரன் கூறியது என்ன ?

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆசியக்கோப்பை தொடரின் முக்கிய போட்டிகள் பாகிஸ்தானில் இருந்து இலங்கையில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஆசிய கோப்பைக்கான அட்டவணையில், ஒன்பது ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட உள்ள நிலையில், வெறும், நான்கு ஆட்டங்கள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இலங்கையில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் நடைபெற்ற இந்தியா -நேபாளம் போட்டியிலும் மழை குறிக்கிட்டதால் ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்பட்டது. அதோடு இன்னும் மீதம் இருக்கும் போட்டிகளும் மழையால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனிடையே நேற்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் 4 சுற்று போட்டியும் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. அதோடு இந்த போட்டிக்கு ரசிகர்களே வராத அதிர்ச்சி நிகழ்வு ஒன்றும் நடைபெற்றுள்ளது, பொதுவாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்படும் நிலையில், தற்போது மைதானம் வெறிச்சோடி கிடந்தது இணையத்தில் பேசுபொருளானது.

இந்த நிலையில், இலங்கை மக்களில் பொருளாதார நிலை குறித்து சிந்திக்காத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே மைதானம் வெறிச்சோடி கிடக்க காரணம் என முன்னாள் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " பொதுவாக ஆசியக் கோப்பையை நடத்தும் நாடுதான் டிக்கெட் கட்டணங்களை நிர்ணயிக்கும். அந்த வகையில் தற்போது ஆசியக் கோப்பையை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் டிக்கெட் கட்டணங்களை நிர்ணயித்துள்ளது.

தற்போது இலங்கை பெரும் பொருளாதார சிக்கலில் உள்ளது. ஆனால், அதை புரிந்துகொள்ளாமல் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்திற்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ.6 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. சிறப்பான இடங்களில் இருந்து இந்த போட்டியை குடும்பத்தோடு பார்க்க ரூ.50 ஆயிரம் செலவாகும். இது இலங்கை மக்களுக்கு ஒரு மாத குடும்ப செலவு. அதனால் தான் மக்கள் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை காண ஆர்வம் காட்டவில்லை" என்று கூறியுள்ளார்.

Also Read: மிரட்டும் மழை.. பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் மோதல்.. இன்றைய ஆட்டம் தொடருமா?