Sports

பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் தடுமாறக் காரணம் இதுதான் - இந்திய வீரர் சுப்மான் கில் கூறியது என்ன ?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் இலங்கை பல்லக்கலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 66 ரன்களுக்கே 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த கிஷன் 82 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா 87 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

பின் வரிசை வீரர்களும் தங்கள் விக்கெட்டுகளை விரைவில் இழக்க இந்திய அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்க வந்தநிலையில், மழை பெய்து ஆட்டம் தொடரமுடியாத காரணத்தால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் இந்திய வீரர்களின் 10 விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களே கைப்பற்றினர். இதன் மூலம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு இந்த தொடர் முழுவதும் கடும் சவாலை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் எங்களுக்கு பெரிய அணுபவம் இல்லாததால்தான் அவர்களுக்கு எதிராக நாங்கள் தடுமாறுகிறோம் என இந்திய வீரர் சுப்மான் கில் கூறியுள்ளார். இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்துப் பேசிய கில், " பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சில் பலமான அணியாக உள்ளது. மற்ற அணிகளை போன்று நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் பெரியளவில் பங்கேற்றதில்லை. பிற அணிகளை போல பாகிஸ்தான் அணியோடு இரு தரப்பு தொடர்களில் ஆடாததால் அவர்களது பந்துவீச்சை எதிர்கொள்வதில் சில தடுமாற்றங்களும் ஏற்படுகிறது.

அதோடு இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை நாங்கள் பெரிதாக எதிர்கொண்டது இல்லை என்பதே உண்மை.பந்துவீச்சாளர்கள் மிக சிறந்த பந்துவீச்சாளர்களாக இருந்தாலும், அவர்களால் எளிதாக எங்கள் விக்கெட்டையும் வீழ்த்த முடியலாம். ஆனால் அதை பற்றி கவலைப்படாமல் நாங்கள் எங்களது பேட்டிங்கில் மட்டுமே கவனத்தை செலுத்தி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

Also Read: "ரசிகர்கள் தோனியை கடவுள் போல பார்க்கிறார்கள்" -சென்னை ரசிகர்களை புகழ்ந்த ஆஸ். வீரர் காமெரூன் க்ரீன் !