Sports

"நாங்கள் நண்பர்கள் இல்லை, ஆனால் கால்பந்து வரலாற்றை மாற்றியுள்ளோம்" -Messi குறித்து Ronaldo கூறியது என்ன ?

உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் கால்பந்தை மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆண்டு வருகின்றனர். இதன் காரணமாக உலகெங்கும் இவ்ர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கிளப் மற்றும் நாட்டுக்காக ஏராளமான கோல்களை குவித்துள்ள இவர்கள் சாம்பியன் வீரர்களாக கொண்டாடப்படுகிறார்கள்.

இந்த இருவரும் கல்பந்தின் பல்வேறு விருதுகளை வென்று அசத்தியுள்ளனர். அதன்படி கால்பந்தின் தலைசிறந்த விருதாக கருதப்படும் 'பாலன் டி ஓர்' விருதை வென்றவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மெஸ்ஸியும் (7 முறை ) இரண்டாவது இடத்தில் ரொனால்டோவும் (5முறை ) இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு 'பாலன் டி ஓர்' விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளிவந்துள்ளது. அதில், கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக ரொனால்டோவின் பெயர் இடம்பெறாத அதிர்ச்சி நிகழ்வு நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு மான்செஸ்டர் அணிக்காக ஆடிய ரொனால்டோ தனது வழக்கமான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை.

இதனால் அந்த அணியில் இருந்து வெளியேறி சவூதி ப்ரோ லீக் தொடரில் அல் நாசர் அணியில் இணைந்தார். மேலும், தேசிய அணிக்காகவும் ரொனால்டோ எந்த பெரிய வெற்றியையும் பெறவில்லை. இதன் காரணமாக ரொனால்டோவின் பெயர் 'பாலன் டி ஓர்' விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

அதே நேரம் ரொனால்டோவின் போட்டியாளரான மெஸ்ஸியின் பெயர் இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மேலும், PSG அணிக்காக லீக் கோப்பை, மற்றும் அர்ஜென்டினா அணிக்காக உலககோப்பைகளை மெஸ்ஸி வென்றுள்ள நிலையில், இந்த ஆண்டு பாலன் டி ஓர்' விருது மெஸ்ஸிக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், மெஸ்ஸி குறித்து ரொனால்டோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரொனால்டோ, " கடந்த 15 ஆண்டுகளாக நானும் மெஸ்ஸியும் கால்பந்தில் பங்களித்துள்ளோம். கால்பந்து வரலாற்றையே மாற்றியுள்ளோம். இப்போதுவரை உலகம் முழுவதும் நாங்கள் மதிக்கப்படுகிறோம் என்பது தான் இருப்பதிலேயே முக்கியமான விஷயம்.

நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இல்லை என்றாலும், ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர மரியாதை கொண்டிருக்கிறோம். என்னைப் பிடிக்கும் என்பதற்காக யாரும் மெஸ்ஸியை வெறுக்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: "முழுசா 10 ஓவர் போடமாட்டார், 50 ரன் அடிக்கமாட்டார்; இவர் ஆல் ரௌண்டரா?" -இந்திய வீரரை விமர்சித்த பத்ரிநாத்