Sports

"எனக்கு அரசியலில் ஆர்வமில்லை, நான் எம்.பி-யாக விரும்பியதில்லை" - சர்ச்சைகளுக்கு சேவாக் பதில் !

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக கடந்த ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பது என அனைத்து கட்சித் தலைவர்களும் பேசியுள்ளனர்.

இதையடுத்து பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு கூட்டணிக்கு ‘I-N-D-I-A’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்தியா என்ற பெயரை கண்டு பாஜகவினர் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதன் எதிரொலியாகத்தான் இந்தியா என்ற பெயரை மாற்றி பாரதம் என வைக்க வேண்டும் என்று பாஜக கும்பல் வலியுறுத்தி வருகிறது. மேலும் இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பினாலும், பாஜக ஆதரவாளர்கள் பாரதம் என பெயர் மாற்ற வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

நேற்று குடியரசுத் தலைவரின் அழைப்பிதழில் ’இந்திய குடியரசுத் தலைவர்’ என்பதற்கு பதில் ’பாரத் குடியரசுத் தலைவர்’ என குறிப்பிடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சை குறித்து இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தனது X வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாங்கள் பாரதியர்கள், இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர். எங்கள் அசல் பெயரை 'பாரத்' அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலமாகிவிட்டது.

இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் பாரதத்தை நெஞ்சில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று BCCI செயலாளர் ஜெய்ஷா அவர்களுக்கு நான் கோரிக்கை வைக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இவரது பதிவுக்கு ஒரு கும்பல் ஆதரவு தெரிவித்தாலும், பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். பலரும் கிரிக்கெட் ஆங்கிலேயர் விளையாட்டு அதை ஏன் விளையாடுகிறீர்கள் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

மேலும், பிரபல நடிகர் விஷ்ணு விஷால், சேவாக்கின் பதிவுக்கு பதில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இதுகுறித்து விஷ்ணு விஷால் வெளியிட்ட பதிவில், "மதிப்பிற்குரிய ஐயா.. இத்தனை வருடங்களில் 'இந்தியா' என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா??" என்று குறிப்பிட்டு கேள்வியெழுப்பியுள்ளார்.அதே போல பலரும் பாஜக சார்பில் எம்.பியாக சேவாக் இப்படி குறிப்பிடுகிறாரா என்றும் இணையவாசிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், இதற்கு சேவாக் மீண்டும் விளக்கமளித்துள்ளார். இது குறித்து, தனது X வலைதள பக்கத்தில் சேவாக் வெளியிட்ட பதிவில், "எனக்கு அரசியல் மீது ஆர்வமில்லை. கடந்து இரண்டு தேர்தல்களிலும், இரு பெரும் கட்சிகளும் என்னைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். சினிமா பிரபலங்களும், கிரிக்கெட் நட்சத்திரங்களும் தங்களின் சுய லாபத்திற்காகவும், பதவி மோகத்திற்காகவும் அரசியலுக்குச் செல்லக்கூடாது என்பதே என் கருத்தாகும்.

அதில் சிலர் மட்டுமே உண்மையாக மக்களை நேசித்து அரசியலுக்குச் செல்கிறார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் அப்படி இருப்பதில்லை. நான் கிரிக்கெட்டிலும், அதை வர்ணனை செய்வதிலுமே ஈடுபாட்டுடன் இருக்கிறேன். எம்.பி-யாக இருக்க வேண்டும் என நான் விரும்பியதில்லை" என்று கூறியுள்ளார்.