Sports

"PSG அணியில் நரகத்தில் இருந்ததைப் போல நானும் மெஸ்ஸியும் உணர்ந்தோம்" - சர்ச்சைகளுக்கு நெய்மர் விளக்கம்!

பிரபல கால்பந்து வீரர் நெய்மர், பிரேசிலை சேர்ந்த சாண்டோஸ் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த திறமையை கண்ட உலக புகழ்பெற்ற கால்பந்து கிளப்களில் ஒன்றான ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா கிளப் அவரை தங்கள் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்தது.

அந்த அணியில் இணைந்த நெய்மர். அதே அணியில் சக வீரரான மெஸ்ஸியுடன் பல்வேறு சாதனைகள் படைத்தார். மேலும், மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு பின்னர் உலகின் முக்கிய வீரராகவும் மாறினார். அதன்பின்னர் பார்சிலோனா கிளப்பில் இருந்து பிரான்சில் PSG அணி, நெய்மரை 222 பில்லியன் யூரோவுக்கு வாங்கியது. இது கால்பந்து உலகின் மிகப்பெரிய ஒப்பந்தமாக கருதப்பட்டது.

அதன் பின்னர் PSG அணிக்கு ஆடிய நெய்மர் தொடர்ந்து தற்போதுவரை அதே அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார். இதனிடையே அவர் PSG அணியில் இருந்து விலகி வேறு கிளப்பில் இணைவார் எனக் கூறப்பட்டு வந்தது. முதலில் அவர் பார்சிலோனா அணியில் இணைவார் என பேசப்பட்ட நிலையில், அது குறித்த ஒப்பந்தம் எதுவும் இறுதியாகவில்லை.

அதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் அணி நெய்மரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், வருடத்துக்கு 649 கோடி ரூபாய்க்கு அல்-ஹிலால் அணி நெய்மரை ஒப்பந்தம் செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே போல நெய்மருக்கு முன்னர் அவரோடு PSG அணியில் இணைந்து விளையாடிய மெஸ்ஸியும் அந்த அணியில் இருந்து விலகி அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் இணைந்தார். இப்படி முக்கிய வீரர்கள் PSG அணியில் இருந்து தொடர்ந்து விலகியது பெரும் கேள்விகளை எழுப்பியது.

இந்த நிலையில், தனது முடிவு குறித்தும், மெஸ்ஸி PSG அணியில் இருந்து விளகியது குறித்தும் நெய்மர் விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் , மெஸ்ஸியை அறிந்த அனைவர்க்கும் அவரைப் பற்றி தெரியும், அவர் பயிற்சி அளிப்பவர், சண்டையிடுபவர், போட்டியில் தோற்றால் கோபப்படுவார். அவர் PSG அணியில் அநியாயமாக நடத்தப்பட்டார். இந்த சூழலில் அவர் உலகக் கோப்பையை வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அவர் அர்ஜென்டினா தேசிய அணியிக்கு செல்லும்போது சொர்கத்துக்கு சென்றார். அதே நேரம் PSG அணியில் நரகத்தில் இருந்ததைப் போல இருந்தார். நானும் அவருடன் நரகத்தில் இருந்தேன். எங்களால் முடிந்ததைச் செய்ய, சாம்பியனாக இருக்க, முயற்சி செய்து வரலாற்றைப் படைக்க நாங்கள் PSG அணியில் மீண்டும் ஒன்றிணைந்தோம். ஆனால், அங்கு எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை"என்று கூறினார்.

Also Read: கால்பந்தில் கோடிகளை இறைக்கும் சவுதி அரேபியா.. ஐரோப்பாவுக்கு போட்டியாக உருவெடுக்குமா சவுதி ப்ரோ லீக் ?