Sports

ஒரு நகர்த்தலுக்கு 27 நிமிடங்கள்.. உலகின் நம்பர் 1 வீரர் கால்சனை திக்குமுக்காடச் செய்த பிரக்ஞானந்தா !

கடந்த 2019-ம் ஆண்டு மும்பையில் Under 18 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 66 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். இதன் இறுதிப்போட்டியில் ஜெர்மனி வீரரை வீழ்த்தி அப்போது 14 வயதான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

14 வயது வீரர் Under 18 உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்றது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரக்ஞானந்தா இந்திய அளவில் பேசப்பட்டார். அதனைத் தொடர்ந்து உலகின் நம்பர் 1 வீரரும் முன்னாள் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா தோற்கடித்து உலகையே ஆச்சரியத்தில் மூழ்க வைத்தார்.

பின்னர் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். இப்படி தொடர் சாதனைகளை நிகழ்த்திவரும் பிரக்ஞானந்தா தற்போது செஸ் உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.

இதில் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா உலகின் முதல் நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சனுடன் நேற்று முதல் சுற்று ஆட்டத்தில் மோதினார். சமனில் முடிந்தஇந்த ஆட்டம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடைபெற்றது. இதில் ஆரம்பத்தில் இருந்தே உலகின் முதல் நிலை வீரர் கார்ல்சனுக்கு பிரக்ஞானந்தா கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் கார்ல்சன் மிகவும் நிதானமாக தனது நகர்த்தல்களை மேற்கொண்டார்.

அதிலும், 13 ஆவது நகர்த்தலுக்கு கார்ல்சென் 27 நிமிடங்களை எடுத்துக் கொண்டது அவர் எந்த அளவு நெருக்கடியை எதிர்கொண்டார் என்பதை உணர்த்துவதாக அமைந்தது. எனினும் இந்த போட்டியில் 35 ஆவது நகர்த்தலின்போது ஆட்டத்தை டிரா செய்வதாக இருவரும் ஒப்புக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சுற்றுப்போட்டி நடைபெற்றது வருகிறது. இந்த போட்டியும் டிராவில் முடிவடைந்தால் அடுத்து டை பிரேக்கர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர்

பிரக்ஞானந்தாவும் கார்ல்சனும் இந்த தொடருக்கு முன்னர் 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் 8 முறை கார்ல்சனும் 5 முறை பிரக்ஞானந்தாவும் வெற்றிபெற்றுள்ளனர். இதில் 6 போட்டிகள் சமனில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: FIFA உலகக்கோப்பையை வென்ற கேப்டனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போட்டிக்கு முன்பே உயிரிழந்த தந்தை !