Sports

ரூ.4000 To ரூ.60,000 - IND vs PAK போட்டியினால் அதிகரித்த ஹோட்டல் கட்டணம்.. BCCI-க்கு வலுக்கும் கண்டனம் !

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.

முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. அதேபோல் இறுதிப்போட்டியும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது. அதோடு முக்கியமாக இந்தியா-பாகிஸ்தான் மோதலும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது.இந்த தொடரில் இந்தியா ஆடும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் அஹமதாபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் நடைபெறும் போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் அந்த போட்டி நடைபெறும் நாட்களில் சராசரி ஹோட்டல் கட்டணங்கள் 15 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சராசரியாக ரூ.4,000 கட்டணம் வசூலிக்கும் விடுதிகள் கட்டணத்தை ரூ.60,000-க்கு உயர்த்தியதாகவும், நட்சத்திர விடுதிகள் கட்டணத்தை பல லட்சத்துக்கு உயர்த்தியதாகவும் முன்பதிவு செயலிகள் மூலம் நடப்பு நிலை வெளியாகியுள்ளது.

அதோடு போட்டிக்கு ஆன்லைனில் டிக்கெட் பெற்றவர்கள் போட்டிக்கு முன்னதாகவே அகமதாபாத்துக்கு வந்து ஆன்லைன் டிக்கெட்டுகளை அசல் டிக்கெட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதால் முன்பதிவு செய்தவர்கள் அன்று இரவு ஹோட்டலில் கட்டாயம் தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹோட்டல் கட்டணங்கள் சரமாரியாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பார்வையாளர்களை நடத்தும் பிசிசிஐ-யின் செயல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதை உறுதி செய்யும் விதமாக தற்போதும் நடப்பதாகவும், இதற்கு முன்னர் இதேபோன்ற நிலையால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆனால், அந்த தவறில் இருந்து பிசிசிஐ எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Also Read: அடுத்தடுத்து அதிரடி: உலகக்கோப்பை தொடரில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு அரையிறுதியை எட்டி பிரக்ஞானந்தா சாதனை