Sports

FIFA மகளிர் உலகக் கோப்பை.. முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஸ்பெயின்.. வெளியேறிய ஸ்வீடன் !

FIFA மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. அதன் லீக் போட்டிகள் முடிவடைந்து நிலையில், முக்கிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லீக் சுற்றில் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அணியான ஜெர்மனி, 7-வது இடத்தில் இருக்கும் கனடா, 8-வது இடத்தில் இருக்கும் பிரேசில் போன்ற அணிகள் வெளியேறின.

அதனைத் தொடர்ந்து 'ரவுண்ட் ஆப் 16' ஆட்டத்தில் நான்கு முறை உலககோப்பை வென்ற அணியும், நடப்பு சாம்பியனுமான அமெரிக்கா - ஸ்வீடன் அணியை எதிர்கொண்டது. இதில் ஸ்வீடன் அணி அமெரிக்காவை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தியது.

காலிறுதியில் ஸ்பெயின், நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், இங்கிலாந்து, கொலம்பியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய அணிகள் முன்னேறின. இதில் காலிறுதி போட்டியில் ஸ்பெயின் அணி நெதர்லாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறியது. அதே போல மற்றொரு போட்டியில், ஸ்வீடன் அணி ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

அதோடு போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியா பிரான்ஸ் அணியை 7-க்கு 6 என்ற கணக்கில் பி அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்து அணி, கொலம்பியா அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி ஸ்வீடன் அணியை எதிர்கொண்டது. இதில் ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக இருந்த நிலையில், முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி முடிவடைந்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஒரு அணிகளும் கோல் அடிக்க தருமாறின. இதில் 81-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி முதல் கோல் அடித்து ஆட்டத்தில் முன்னணி பெற்றது. ஆனால் இதற்கு 88-வது நிமிடத்தில் ஸ்வீடன் அணி கோல் அடித்து பதிலடி கொடுத்தது.

இதனால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 89-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி அடுத்த கோல் அடிக்க அதுவே வெற்றிகோலாக மாறியது. இறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Also Read: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டவருக்கு தேசிய அணியில் இடம்.. IPL வீரருக்கு இறுதியில் கிடைத்த வாய்ப்பு !