Sports

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா.. அசத்திய தமிழ்நாடு வீரர் கார்த்தி !

விளையாட்டுக்கு புகழ் பெற்ற சென்னையில் பல ஆண்டுகளாக கிரிக்கெட் தவிர பிற முக்கிய சர்வதேச போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றதும் உலகமே வியக்கும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் முயற்சியால் 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சர்வதேச ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக பல்வேறு நாடுகளின் வீரர்கள் சென்னை வந்த நிலையில், முதல் போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நடந்த லீக் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 4 வெற்றி 1 டிராவுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

மலேசிய அணி 4 வெற்றி ஒரு தோல்வியுடன் இரண்டாம் இடமும், தென் கொரியா ஒரு வெற்றி , 2 டிரா 2 தோல்வியுடன் மூன்றாம் இடமும், ஜப்பான் அணி ஒரு வெற்றி, 2 டிரா 2 தோல்வியுடன் மூன்றாம் இடமும் பெற்று அரையிறுதிக்கு முன்னேறின.அதே நேரம் தென் கொரியா,ஜப்பான் அணிகளை போல ஒரு வெற்றி, 2 டிரா 2 தோல்வியை பெற்று இருந்தாலும் அதிக கோல்கள் வாங்கியதால் பாகிஸ்தான் அணி ஐந்தாம் இடம்பெற்று தொடரில் இருந்து வெளியேறியது. சீன அணி ஒரு டிரா, 4 தோல்வியுடன் கடைசி இடம் பிடித்தது.

இந்தியா நிலையில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. உலகின் தலைசிறந்த கோல்கீப்பரில் ஒருவரும், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமுமான, கோல்கீப்பர் ஸ்ரீ ஜேஸ் தனது 300 வது போட்டியில் களமிறங்கினார்.

ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய அணி வீரர்கள் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். ஆட்டத்தின் 19 வது நிமிடத்தில் இந்தியாவின் ஆகாஷ்தீப் அற்புதமாக கோல் அடித்து கணக்கை தொடங்கிவைத்தார். அடுத்து 23 மற்றும் 30 வது நிமிடங்களில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். இதன் மூலம் முதல் பாதி முடிவில் இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் எதிரணியின் ஆட்டத்தை திறமையாக தகர்த்தெறிந்தனர் இந்திய வீரர்கள். ஆட்டத்தின் 39 வது நிமிடத்தில் சக வீரர் கொடுத்த பந்தை எல்லை கோட்டிற்கு அருகே நேர்த்தியாக கையாண்டு கோலாக மாற்றினார் இந்திய வீரர் ஸ்மிடத். ஆட்டத்தின் 31 வது நிமிடத்தில் தமிழ்நாடு வீரர் கார்த்தி அடித்த கோலால் அரங்கம் அதிர்ந்தது. மைதானம் முழுவதும் கார்த்திக், கார்த்திக் என உற்சாக குரல் ரசிகர்கள் எழுப்பினர். நடப்பு தொடரில் இரண்டாவது கோலை பதிவு செய்தார் கார்த்தி. கடைசி வரை போராடியும் ஜப்பான் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

முன்னதாக, நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொரிய அணியை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மலேசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Also Read: "ICC உலகக்கோப்பையின் அரையிறுதிக்கு செல்லும் அணிகள் என்ன ?" - சேவாக் வெளியிட்ட கணிப்பு !