Sports

"Bazball -க்கு இந்தியாவில்தான் உண்மையான சவால் இருக்கிறது" -இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கூறியது என்ன ?

கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக ப்ரென்டன் மெக்கலமும், அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸும் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர் இயான் மார்கன் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகப்படுத்தி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த அட்டாக்கிங் கேமை டெஸ்ட்டிலும் அறிமுகப்படுத்தினர்.

இவர்களின் இந்த புதிய பரிமாணம் bazball என அழைக்கப்பட்டது. இந்த முறையில் நியூஸிலாந்து, இந்தியா போன்ற அணிகளை சொந்த மண்ணில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. அதன் பின்னர் பலரும் இந்த bazball முறைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று முடிந்த பழமையானதும், மதிப்புமிக்கதுமான ஆஷஸ் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலிய அணி 2-0 என்று முன்னிலையில் இருந்தபோது, bazball முறையில் அதிரடியாக ஆடி அந்த தொடரை 2-2 என்று சமநிலைக்கு கொண்டுவந்தது.

அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. பொதுவாக பேட்டிங்க்கு சாதகமாக ஆடுகளத்தை அமைத்து அதில் விரைந்து ஸ்கோர் செய்யும் இங்கிலாந்தின் bazball அணுகுமுறை சுழற்பந்துக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் செல்லுபடியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க பதிலளித்த அவர், "இங்கிலாந்து அணிக்கு இந்திய சுற்றுப்பயணம் மிகப் பெரிய சவாலாக அமையப் போகிறது. இந்த முறை இங்கிலாந்து அணியின் bazball அணுகுமுறை இந்தியாவின் வலிமை வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் ஆகியோரின் சுழலை எதிர்த்து bazball எவ்வாறு செயல்பட போகிறது என்பது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருக்கப் போகிறது" என்று கூறியுள்ளார்.