Sports
ஸ்டெம்பை தாக்கிய விவகாரம்.. இந்திய மகளிர் அணி கேப்டனுக்கு அபராதம்.. ICC அதிரடி நடவடிக்கை !
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி கைப்பற்றியது.
பின்னர் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்று இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது. எனினும் அந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. எனினும் இந்திய அணியின் இந்த தோல்வி பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்து வெற்றிபெற்றது. எனினும் சுதாரித்த இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி முதலில் சிறப்பாக ஆடினாலும் இறுதி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு மூன்று ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் இருந்தது. அந்த ஓவரில் இரண்டு ரன்களை எடுத்த இந்திய அணி வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், விக்கெட்டை இழந்து ஆல் அவுட்டானது. இதனால் போட்டி சமனில் முடிய ஒரு நாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு நடுவர் எல்.பி முறையில் ஆட்டமிழந்ததாக கூறினார். ஆனால், நடுவரின் இந்த முடிவால் ஆத்திரம் அடைந்த ஹர்மன்ப்ரீத் கவுர் ஸ்டம்பை பேட்டால் தாக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு அபராதம் விதித்துள்ளது. அதன்படி ஹர்மன்ப்ரீத் கவுருக்கு போட்டி சம்பளத்தில் 75 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவதாகவும், மேலும் 3 டிமெரிட் (demerit) புள்ளிகள் வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
இந்த தொடரில், நடுவர்கள் முழுக்க வங்கதேசத்தை சார்ந்தவர்கள் என்றும், இதனால் அவர்கள் முக்கிய கட்டத்தில், வங்கதேசத்துக்கு சாதகமாக செயல்பட்டனர் என்றும் இந்திய ரசிகர்கள் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!