Sports

எனக்கு இப்போது இருப்பது இரண்டே கனவுகள்தான் -இந்திய அணியின் கேப்டன் வாய்ப்பு குறித்து ருத்துராஜ் கருத்து !

2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது.

ஏனெனில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் வருகின்ற செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்திய அணி கலந்துகொண்டால் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பும் இந்திய அணிக்கு உள்ளது.

இதனால் இதில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் ,அந்த நாட்களில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால் அதில் இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் ஆடவர் அணியின் பங்கேற்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிசிசிஐ-யின் உயர்மட்ட குழு கூட்டத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதில் இரண்டாம் கட்ட இந்திய அணி அனுப்பப்படும் என கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு இளம்வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் பல இளம்வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், இந்திய அணியில் கேப்டன் வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து இளம்வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "இந்திய அணியை வழிநடத்துவது தனிப்பட்ட முறையில் எனக்கும் என்னுடைய மற்ற உறுப்பினர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு. இது குறித்து எனக்கு மகிழ்ச்சியாகவும், அதே நேரத்தில் உண்மையில் பெருமையாகவும் இருக்கிறது. இந்த அணியில் இருக்கும் பலர் இந்தியா ஏ அணியில் சேர்ந்தும், ஒருவருக்கொருவர் எதிராக ஐபிஎல் போட்டியிலும் விளையாடினோம்.

ஆனால், இப்போது சேர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும், நாட்டிற்கான பதக்கத்தை வெல்வதும் மிக மிக அற்புதமான தருணமாகி இருக்கும். நாங்கள் இந்த தொடரில் வென்று, இந்தியாவில் இருக்கும் அனைவரையும் பெருமைபடுத்துவோம். என்னுடைய இப்போதைய கனவு தங்கப் பதக்கத்தை வெல்வதும், மேடையில் நின்று நம் நாட்டு தேசிய கீதத்தை பாடுவதும்தான்" என்று கூறியுள்ளார்.

Also Read: “என்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார்கள்” : RCB அணியை 2 ஆண்டுகளுக்கு பின் விமர்சித்த சஹால் !