Sports

கால்பந்தின் தலை சிறந்த வீரர் (மெஸ்ஸி ) தங்கள் அணியில் ஆடுகிறார் - அதிகாரபூர்வமாக வெளியானது அறிவிப்பு !

நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த போட்டியில் ரொனால்டோ கண்ணீரோடு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி ’பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்’ என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். PSG அணியுடனான மெஸ்ஸியின் ஒப்பந்தம் இந்தாண்டோடு முடிவடையும் நிலையில், அடுத்ததாக அவர் தொடர்ந்து PSG அணியில் தொடருவாரா அல்லது வேறு அணிக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. அதிலும் ரொனால்டோ ஆடும் சவுதி லீக்கின் அல் நாசர் அணியின் போட்டி கிளப்பான அல் ஹிலால் ரொனால்டோவை விட அதிக தொகைக்கு மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறப்பட்டது.

மேலும், மெஸ்ஸி நீண்ட நாள் ஆடிய பார்சிலோனா கால்பந்து கிளப் மீண்டும் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாகவும், அந்த அணியோடு மெஸ்ஸியின் மேலாளரும் தந்தையுமான ஜோர்ஜே பேசி வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த செய்திகளை பார்சிலோனா கால்பந்து கிளப்பின் தலைவர் ஜோன் லபோர்டா மறுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மெஸ்ஸி தற்போது ஆடிவரும் PSG கிளப்பில் இருந்து விலகுவதில் உறுதியாக உள்ளார் என்றும், இதன் காரணமாக இந்த சீசன் முடிந்ததும் அவர் PSG கிளப்பில் இருந்து விலகுவார் என்றும் PSG அணியில் பயிற்சியாளர் கிறிஸ்டோஃப் கால்டியர் அறிவித்தார். இதன் காரணமாக மெஸ்ஸி அடுத்து எந்த கால்பந்து அணியில் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் இருந்த நிலையில் தற்போது அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி மெஸ்ஸி அமெரிக்காவின் MLS தொடரில் பங்கேற்கும் இன்டர் மியாமி அணியில் இணையவுள்ளதாக அந்த அணி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில் கால்பந்தின் தலை சிறந்த வீரர் (மெஸ்ஸி ) தங்கள் அணியில் ஆடுகிறார் என அறிவித்துள்ளது. இன்டர் மியாமி அணியானது 5 ஆண்டுகளுக்கு முன்னர் தான் உருவாக்கப்பட்டது என்பதும் இதன் உரிமையாளர்களில் ஒருவர் இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், பணம் முக்கியம் என்றால் தான் சவூதி சென்றிருப்பேன் என்று மெஸ்ஸி கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: "இந்திய அணியில் இந்த தமிழ்நாடு வீரர் இல்லை என்பது பெரும் ஏமாற்றம் " -முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து !