Sports

“என்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார்கள்” : RCB அணியை 2 ஆண்டுகளுக்கு பின் விமர்சித்த சஹால் !

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது. எனினும் ஐபிஎல் தொடரில் வெற்றிகரணமாக அணிகளாக சென்னை மற்றும் மும்பை அணிகள் வளம் வருகிறது.

அதேபோல தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும் ரசிகர்கள் பலத்தால் எப்போதும் எதிர்பார்ப்புமிக்க அணியாக பெங்களூரு அணி திகழ்கிறது. இறுதியாக 2022 - ஆண்டு மெகா ஏலம் நடைபெற்றது. அப்போது அணிகள் தங்கள் முக்கிய வீரர்களை தக்க வைத்து பிற வீரர்களை வெளியேற்றினர். அதன் வகையில் 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அந்த அணியில் நட்சத்திர வீரரான சஹாலை விடுவித்து அதிர்ச்சி அளித்தது.

அதன் பின்னர் அவர் ராஜஸ்தான் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு அந்த அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறார். ஆனால், சஹால் இல்லாமல் பல போட்டிகளில் பெங்களூரு அணி தடுமாறி வந்தது. இந்த நிலையில், தான் பெங்களூரு அணியால் நிராகரிக்கப்பட்டது குறித்து, சஹால் பேசியுள்ள கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவின் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், " நான் பெங்களூரு அணியில் 8 ஆண்டுகள் விளையாடியபோதுதான் எனக்கு இந்திய அணியின் தொப்பியை அணியும் வாய்ப்பு கிடைத்தது. பெங்களூரு அணியில் முதல் போட்டியில் இருந்தே கோலி எனக்கு நம்பிக்கை ஊட்டினார். 8 ஆண்டுகள் அந்த அணியில் இருந்ததால் பெங்களூரு அணி ஒரு குடும்பம் போலவே தோன்றியது.

அந்த அணிக்காக 114 போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஏலத்தில், அவர்கள் என்னை எடுப்பதாக முழுவதுமாக உறுதியளித்தும், நான் அங்கு தேர்ந்தெடுக்கப்படாதது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அங்கு நான் பெரிய தொகை கேட்டது போல் நிறைய வதந்திகள் வந்தன. ஆனால், அப்படி எதுவும் நான் கேட்கவில்லை. ஏலத்தில் எடுக்காதபோது அணி சார்பில் எனக்கு எந்த தொலைபேசி அழைப்புகளும் இல்லை, அணி என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை. குறைந்த பட்சம் என்னிடம் பேசியிருக்கலாம். அந்த தருணத்தில் மிகவும் மோசமாக உணர்ந்தேன்" என்று கூறியுள்ளார்.

Also Read: "இந்திய அணியில் இந்த தமிழ்நாடு வீரர் இல்லை என்பது பெரும் ஏமாற்றம் " -முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து !