Sports

"நான் மெஸ்ஸி, ரொனால்டோவை விட சிறந்தவன்" -இந்திய அணி கேப்டன் சுனில் சேத்திரி கருத்து !

உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் கால்பந்தை மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆண்டு வருகின்றனர். இதன் காரணமாக உலகெங்கும் இவ்ர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கிளப் மற்றும் நாட்டுக்காக ஏராளமான கோல்களை குவித்துள்ள இவர்கள் சாம்பியன் வீரர்களாக கொண்டாடப்படுகிறார்கள்.

இது தவிர இந்தியாவிலும் இவர்களுக்கு பெரும் அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு மாற்றாக தற்போது இந்திய கால்பந்து ரசிகர்கள் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்திரியின் பெயரை உச்சரித்து வருகின்றனர். அதிலும் சமீப காலமாக இவர் செய்துள்ள சாதனைகளால் இவர் உலகளவில் கொண்டாடப்படும் வீரராகவும் மாறியுள்ளார்.

சர்வதேச அளவில் நாட்டுக்காக அதிக கோல் அடித்த நடப்பு வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸிக்கு அடுத்த இடத்தில் சுனில் சேத்திரி இருக்கிறார். மேலும், அவர் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் இன்டர்கான்டினென்டல் கோப்பை மற்றும் தெற்காசிய கோப்பையை வென்று அசத்தியது.

இந்த நிலையில், தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது, நான் மெஸ்ஸி, ரொனால்டோவை விட விட சிறந்தவனாக இருக்க முடியும் என சுனில் சேத்திரி கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இந்திய கால்பந்து மீதான ரசிகர்களின் அணுகுமுறை மற்றும் விழிப்புணர்வில் ஒரு நேர்மறையான மாற்றம் எற்பட்டு உள்ளது. சூழ்நிலை மாறுவதை என்னால் உணர முடிகிறது.

எங்களது அடுத்த இலக்கு ஆசியக் கோப்பைதொடர்தான். அது எங்களுக்கு உலகக் கோப்பையை போன்றது. ஒவ்வொரு முறையும் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறுகிறோம், ஆனால் கோப்பையை தவறவிடுகிறோம். ஆனால் இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்வோம். நான் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் ரசிகன். ஆனால், தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது, நான் அவர்களை விட சிறந்தவனாக இருக்க முடியும் என நம்புகிறேன்"எனக் கூறியுள்ளார்.

Also Read: "உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ள அணிகள் இதுதான்" - கங்குலி கூறிய அணிகள் என்னென்ன ?