Sports
இந்திய கிரிக்கெட்டின் முதல் சூப்பர் ஹீரோ.. 90s, 2K கிட்ஸ்களால் பெரிதாக அறியப்படாத கவாஸ்கரின் சாதனை !
கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியது என்னவோ இங்கிலாந்தாக இருந்தாலும், அதனை கட்டியாண்டது என்னவோ அதன் காலணி நாடுகளாக இருந்த ஆஸ்திரேலியாவும், மேற்கு இந்திய தீவுகள் அணியும்தான். 1950-களுக்கு பின்னர் உலகம் முழுவதும் கிரிக்கெட் அறியப்பட்ட நிலையில், 60களில் மேற்கு இந்திய தீவுகள் அணி எழுச்சி பெற்று பலம் வாய்ந்த அணியாக உருப்பெற்றது.
அதிலும் 70களில் கிளைவ் லாயிட் தலைமையில் யாராலும் வீழ்த்த முடியாத அணியாக மேற்கு இந்திய தீவுகள் அணி மாறி கிரிக்கெட் உலகை கட்டியாண்டது. அதிலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சளர்களான மிச்சேல் ஹோல்டிங், ஜோயல் கார்ட்னர், ஆண்டி ராபர்ட்ஸ், மால்கம் மார்ஷல் கூட்டணியை கண்டு அப்போது முன்னணி அணிகளாக இருந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களே அச்சம் அடைந்தனர்.
அதிலும் அப்போது இந்திய அணியை பற்றி சொல்லவே தேவையில்லை. சொல்லிக்கொள்ளும் அளவு எந்த வேகப்பந்து வீச்சாளர்களும், பேட்ஸ்மேன்களும் அணியில் இல்லவே இல்லை. இதனால் இப்போது வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் எப்படி கிரிக்கெட் அரங்கில் பார்க்கப்படுகிறதோ அப்படிதான் இந்தியாவும் பார்க்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணியை போலவே அப்போது இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே துணை கண்ட ஆடுகளத்தில் பிற அணி வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தனர்.
அப்படிபட்ட இந்திய அணி 1971-ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்தது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில்தான் இந்திய அணியில் அறிமுகமானார் சுனில் கவாஸ்கர். ஆனால் முதல் போட்டியிலேயே மேற்கு இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு முதல் இன்னிங்சில் 65 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 67 ரன்களும் விளாசினார்.
அதன்பின்னர் அடுத்த டெஸ்ட் போட்டியிலேயே தனது முதல் சதத்தையும் பதிவு செய்து அசத்தினார். அதோடு நிற்காத அவர் அந்த தொடர் முழுவதும் மேற்கு இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை நாளாபுறமும் விளாசி சர்வதேச கிரிக்கெட்டுக்கு தனது வருகையை பட்டவர்த்தனமாக அறிவித்தார். அந்த தொடரில் மட்டும் ஒரு இரட்டை சதம், 3 சதங்கள், 2 அரைசதங்கள் என்று 774 ரன்களை விளாசி கிரிக்கெட் உலகையே அதிர வைத்தார்.
அதன்பின்னர் அவர் செய்தது எல்லாம் சரித்திர சாதனைகள்தான். ஐசிசி நடத்திய முதல் உலகக்கோப்பையில் மெதுவாக ஆடி விமர்சனத்தை சந்தித்ததை தவிர, அவர் தொட்டது எல்லாம் சரித்திரம்தான். 125டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 சதங்களோடு 10,122 ரன்கள் குவித்துள்ளார். அதோடு கிரிக்கெட் வரலாற்றில் யாரும் எட்டமுடியாது என கூறப்பட்ட 10 ஆயிரம் ரன்களை முதன்முறை எட்டியவர் கவாஸ்கர்தான்.
மேலும், சச்சின் முடியடிக்கும் வரை 20 ஆண்டுகளாக டெஸ்டில் அதிக சதம் விளாசிய சாதனையும் கவாஸ்கர் வசமே இருந்தது. அதோடு சச்சின் தான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதே கவாஸ்கரை பார்த்துதான் என்று கூறியதும் பலர் அறிந்திடாததே. இத்தனைக்கும் கவாஸ்கர் தனது கிரிக்கெட் கரியரில் ஒருமுறை கூட ஹெல்மெட் அணிந்து விளையாடியது கிடையாது.
ஒருவேளை கவாஸ்கர் மட்டும் தரபோதைய காலத்தில் விளையாடி இருந்தால் சச்சினின் சாதனையை விட மகத்தான பல சாதனைகளை படைத்து இருப்பார். இந்திய அணி பெரிதாக பேசப்படாத காலத்தில் கூட, உலகெங்கும் அறிந்த நட்சத்திர கிரிக்கெட் வீரராக கவாஸ்கர் திகழ்ந்தார். இதனால்தான் அவர் இந்திய கிரிக்கெட்டின் முதல் சூப்பர் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!