Sports

கிரிக்கெட்டின் உச்சம் TEST கிரிக்கெட்தான்.. மீண்டும் நிரூபித்த ஆஷிஷ்.. இறுதிவரை போராடி வென்ற ஆஸ்திரேலியா!

டி20, டி10 என கிரிக்கெட் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பரிணாமம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டெஸ்ட் போட்டிகள்தான். கிரிக்கெட்டின் 'ஆன்மா' குலையாமல் காத்து வருபவை டெஸ்ட் போட்டிகள் மட்டுமே. அப்பேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' கோப்பையை இந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து டெஸ்ட் அரங்கில் பழமையானதும், மதிப்புமிக்கதுமான ஆஷிஷ் தொடர் 5 நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. ஜோ ரூட் 118 ரன்களும், கிராவ்லி 61 ரன்களும் ஜானி பையட்ஸ்டோவ் 78 ரன்களும் எடுக்க இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 393/8 ரன்கள் குவித்து முதல் நாளிலேயே டிக்ளர் செய்து அதிசயிக்க வைத்தது. ஆனால், அந்த முடிவு தனக்கே எதிராக திரும்பும் என அந்த அணி எதிர்பார்க்கவில்லை.

பின்னர் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் கவாஜாவின் 141 ரன்கள், ஹெட் 50, கேரி 66 ஆகியோரிடம் இன்னிங்க்ஸுடன் 386 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி, ரூட் 46, ஹரி ப்ரூக் 46, கேப்டன் ஸ்டோக்ஸ் 43 ஆகியோரும் பங்களிப்புடன் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனால் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 281 ரன்கள் இலக்கொடு ஆஸ்திரேலிய அணிக்கு இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது. அதில் 4ம் நாள் முடிந்து, 5-ம் நாள் தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் இறுதிநாளில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 174 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இங்கிலாந்தின் வெற்றிக்கு 7 விக்கெட்டுகள் தேவை பட்டதால் ஆட்டத்தில் இறுதிநாளில் உச்சகட்ட பரபரப்பு நிலவியது.

முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய கவாஜா இரண்டாவது நாளிலும், சிறப்பாக ஆட எதிரில் போலண்ட் 20, டிராவிஸ் ஹெட் 16, கேமரூன் க்ரீன் 28 அடுத்து வந்த வீரர்கள் கொஞ்சம் நின்று கொடுத்தனர். பின்னர் இறுதிக்கட்டத்தில் கவாஜா 65 ரன்களிலும், கேரி 20 ரன்களிலும் ஆட்டமிழக்க, பெரும் பரபரப்பு நிலவியது. இறுதியில் 2 விக்கெட்டுகள் மீதான இருந்த நிலையில், 54 ரன்கள் தேவைப்பட ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

ஆனால், கேப்டன் கம்மின்ஸ் மற்றும் லயான் ஆகியோர் எதிர்பாராத இடத்தில இருந்து தங்கள் விக்கெட்களை இழக்காமல் திரில் வெற்றியை பதிவு செய்தது. கமின்ஸ் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 44 ரன்கள் எடுக்க அவருக்கு துணையாக நேதன் லயன் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

Also Read: "என்னை அணியில் இருந்து நீக்குமாறு தோனியிடம் கூறியதே நான்தான்" -அதிர்ச்சி தகவலை பகிர்ந்த சுரேஷ் ரெய்னா !