Sports

IPL-ஐ தொடர்ந்து TNPL.. அடுத்தடுத்து 5 அரைசதங்கள் விலாசிய சாய் சுதர்சன்.. இந்திய அணியில் கதவு திறக்குமா ?

உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் கடந்த ஆண்டு இடம்பிடித்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அந்த அணி சாய் சுதர்சனை தக்கவைத்தது. இதனால் இந்த சீசனில் அவரை அந்த அணி நன்கு பயன்படுத்தும் என எதிர்பார்ப்பு எழுந்தது.

அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் குஜராத் அணி சாய் சுதர்சனுக்கு வாய்ப்புகள் வழங்கியது. அதனைப் நன்கு பயன்படுத்திய சாய் சுதர்சன் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், சிறப்பாக ஆடியும் திடீரென சாய் சுதர்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் தமிழக ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை குஜராத் அணி தொடர்ந்து பயன்படுத்தாதது விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிறப்பான ஆடிய அவர் 43 ரன்கள் குவித்து ரிடையர்ட் கட் முறையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் அவர் களமிறங்கினார்.

சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கில் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய சாய் சுதர்சன் முதலில் நிதானமாக ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். 12 பந்துகளுக்கு 10 ரன்கள் என ஆரம்பத்தில் அவ்வளவு மெதுவாக தொடங்கியவர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதிரடியைத் தொடங்கினார். அதிலும் தீக்க்ஷனா பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர் அடித்து அசத்தினார். தொடர்ந்து 33 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

ஆனால் அதன்பின்னர் தொடர்ந்து சரவெடியாக வெடித்த அவர், 47 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரிகள் என 96 ரன்கள் விளாசி இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்து ஓய்வறைக்கு சென்ற அவருக்கு குஜராத் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், மைதானமே அவரின் இந்த ஆட்டத்தை எழுந்து நின்று பாராட்டியது. இந்த அபார ஆட்டத்தைத் தொடர்ந்து விரைவில் அவர் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் தான் காட்டிய அதிரடியை அவர் டி.என்.பி.எல் தொடரிலும் தொடர்ந்து வருகிறார். டி.என்.பி.எல் தொடரில் ஐபிஎல்-லை விட அதிக தொகை கொடுத்து சாய் சுதர்சனை கோவை கிங்ஸ் அணி எடுத்த நிலையில் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சாய் சுதர்சன் இருந்து வருகிறார்.

ஏற்கனவே டி.என்.பி.எல் தொடரில் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்கள் விலாசிய நிலையில், நேற்று சேப்பாக்கம் அணிக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில் 64 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறவைத்தார். ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து 2 அரை சதங்கள் விலாசிய அவர் பின்னர் தொடர்ந்து டி.என். பி. எல்லில் தொடரிலும் அடுத்தடுத்து 3 அரை சதங்கள் விலாசி தொடர்ந்து 5 அரைசதங்கள் அடித்து உச்சகட்ட பார்மில் இருந்து வருகிறார்.

Also Read: மோதலுக்கு பாகிஸ்தான் தயார்.. ஆனால் இந்தியா தயாராக இல்லை ! - பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் கூறியது என்ன?