Sports

இதற்கு பேசாமல் பேட்ஸ்மேனாக இருந்திருக்கலாம் என தோன்றியது - புறக்கணிப்பு குறித்து அஸ்வின் விரக்தி !

டி20, டி10 என கிரிக்கெட் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பரிணாமம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டெஸ்ட் போட்டிகள்தான். கிரிக்கெட்டின் 'ஆன்மா' குலையாமல் காத்து வருபவை டெஸ்ட் போட்டிகள் மட்டுமே. அப்பேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' ன் இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக இந்திய அணி முன்னேறியது.

கடந்த முறை முதல்முறை கடந்த முறை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்த இந்திய அணி இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.

ஆனால் இந்திய ரசிகர்களின் இந்த ஆசைக்கு ஆஸ்திரேலிய அணியின் அபார ஆட்டம் முடிவு கட்டியுள்ளது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவிக்க இந்திய அணியோ 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அப்போதே இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு 50% முடிவுக்கு வந்தது. அதே போல இரண்டாவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய அணி 270 ரன்களுக்கு டிக்ளர் செய்ய இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், ஆரம்பத்தில் அபாரமாக தொடங்கிய இந்திய அணி பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணியின் ஐசிசி கோப்பை கனவு 10 ஆண்டுகளுக்கு கானல் நீராகவே நீடிக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளரான அஸ்வினை அணியில் சேர்க்காதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. சச்சின் உள்ளிட்ட பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இதனை குறிப்பிட்டு இந்திய அணியை விமர்சித்தனர்.

அதோடு சமீப காலத்தில் அஸ்வினை போன்று வேறு எந்த வீரரும் இந்திய அணியில் இப்படி நடத்தப்பட்டு இருக்க மாட்டார்கள் என கவாஸ்கர் அணி நிர்வாகத்தை காட்டமாக விமர்சித்துள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். தனியார் நாளிதழுக்கு அஸ்வின் அளித்த பேட்டியில், "இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு நானும் ஒரு காரணம் . அதனால் அந்தப் போட்டியில் விளையாட ஆவலாக இருந்தேன். கடந்த முறை ஆடிய இறுதிப்போட்டியில் கூட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தேன்.

2018 -19 ஆண்டுகளில் கூட வெளிநாடுகளில் சிறப்பாகவே பந்துவீசி இருக்கிறேன். இங்கிலாந்தில் 4வது இன்னிங்ஸில் தான் ஸ்பின்னர்களுக்கு அதிக வேலை இருக்கும். போதுமான ரன்களோடு 4வது இன்னிங்ஸை எதிர்கொண்டால், ஸ்பின்னர்கள் நிச்சயம் வென்று கொடுப்பார்கள். சிறு வயதில் சச்சின் டெண்டுல்கர் அவ்வளவு ரன்கள் குவித்த போதும், பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்தவில்லையே என்று நினைத்தே, நான் சிறந்த பந்துவீச்சாளராக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்துவிட்டு நிச்சயம் பந்துவீச்சாளராக மாறி இருக்க கூடாது என்று வருத்தம் ஏற்படுகிறது.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன், நான் இந்திய பிளேயிங் லெவனில் இல்லை என்று தெரியும். அதனால் பெஞ்சில் இருந்து இந்திய வீரர்களுக்கு எப்படி உதவலாம் என்பதே என் எண்ணமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

Also Read: உலகக்கோப்பை அட்டவணை வெளியாகாததற்கு காரணம் மோடி மைதானமா ? -வெளியான தகவலால் அதிர்ச்சி !