Sports

"ஆமாம், நாங்க சும்மா இருந்தோம்.. தோனி மட்டும் தனியாக சென்று கோப்பையை வென்றார்.." -ஹர்பஜன் சிங் காட்டம் !

இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.

அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவி கோப்பையை தவறவிட்டது. மேலும், கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்லாமல் இந்திய அணி திணறி வருகிறது.

இதன் காரணமாக தோனி குறித்த விவாதம் சமூகவலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. தோனி கேப்டனாக இருந்ததால்தான் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது என்று தோனி ரசிகர்கள் சிலாகிக்க, அதற்கு பிற வீரர்களின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், ரசிகர் ஒருவரின் பதிவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர் ஒருவர் கேப்டனான 48 நாட்களில் இளம் வீரர்களுடன் சென்று ஃபார்மில் இருந்த ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் வீழ்த்தி, டி20 உலகக்கோப்பையும் வென்ற கேப்டன் தோனி என்று கூறியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஹர்பஜன் சிங், அதற்கு பதிலளித்து "இந்தப் போட்டிகளை எல்லாம் இந்தியாவில் இருந்து தனியாக சென்ற ஒரு இளம் வீரர் மட்டும் தான் ஆடி தனியாக வென்றார். மீதமுள்ள 10 வீரர்கள் விளையாடவே இல்லை. ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் உலகக்கோப்பையை வென்றால், ஆஸ்திரேலியா வென்றதாகவே தலைப்புகள் இருக்கும். ஆனால் ஒரு இந்தியா கோப்பையை வென்றால், அங்கு கேப்டன் வென்றுவிட்டார் என்று சொல்கிறார்கள். கிரிக்கெட் என்பதே ஒரு குழு விளையாட்டு.. நாங்கள் ஒன்றாக எப்படி வெல்கிறோமோ, அதேபோல் ஒன்றாகவே தோற்கிறோம்" என்று கூறியுள்ளார்.

Also Read: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. இந்திய அணியின் தோல்வி குறித்து அஸ்வின் கூறியது என்ன ?