Sports

மெஸ்ஸியை மீண்டும் ஒப்பந்தம் செய்யும் எண்ணம் இல்லை - பார்சிலோனா கால்பந்து கிளப் தலைவர் அறிவிப்பு !

நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த போட்டியில் ரொனால்டோ கண்ணீரோடு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அர்ஜெண்டின கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி ’பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்’ என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் ஒரே கால்பந்து லீக்கில் விளையாடும் வாய்ப்பு அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. '

PSG அணியுடனான மெஸ்ஸியின் ஒப்பந்தம் இந்தாண்டோடு முடிவடையும் நிலையில், அடுத்ததாக அவர் தொடர்ந்து PSG அணியில் தொடருவாரா அல்லது வேறு அணிக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் ரொனால்டோ ஆடும் சவுதி லீக்கின் அல் நாசர் அணியின் போட்டி கிளப்பான அல் ஹிலால் ரொனால்டோவை விட அதிக தொகைக்கு மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், மெஸ்ஸி நீண்ட நாள் ஆடிய பார்சிலோனா கால்பந்து கிளப் மீண்டும் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாகவும், அந்த அணியோடு மெஸ்ஸியின் மேலாளரும் தந்தையுமான ஜோர்ஜே பேசி வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த செய்திகளை பார்சிலோனா கால்பந்து கிளப்பின் தலைவர் ஜோன் லபோர்டா மறுத்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், " லியோனல் மெஸ்ஸியுடன் நாங்கள் நல்ல உறவை மீண்டும் ஏற்படுத்தியுள்ளோம். மெஸ்ஸியின் தொலைபேசி மூலமாக உரையாடல் ஒன்றை அனுப்பினோம். அந்த உரையாடல் அன்பாகவும் இனிமையாகவும் இருந்தது என்பதே உண்மை. நாங்கள் லியோனல் மெஸ்ஸியை மிகவும் நேசிக்கிறோம்.

ஆனால் அவரை தற்போது எங்களது கழகத்திற்கு அழைத்து வரும் எந்த திட்டமும் எங்களிடம் இல்லை. காரணம் எங்களது கிளப் தற்போது சிக்கன திட்டத்தை கையாண்டுள்ளது. அப்படியிருக்கும்போது அதிக விலை கொடுத்து மெஸ்ஸியை வாங்கும் நிலையில் நாங்கள் இப்போது இல்லை" என்று கூறியுள்ளார். இதன்மூலம் அடுத்த சீசனில் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் இணைவார் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Also Read: தங்க முட்டையிடும் வாத்தை இங்கிலாந்து கொன்று வருகிறது -மேற்கிந்திய தீவுகள் அணி முன்னாள் வீரர் விமர்சனம் !