Sports

"தோனி கொடுத்த இந்த அட்வைஸ் வித்தியாசமாக இருந்தது" -சிக்ஸர் நாயகன் ரிங்கு சிங் கூறியது என்ன ?

கடந்த ஏப்ரல் 8-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணி கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லாததால் குஜராத் அணியை ரஷித் கான் தலைமை தாங்கினார்.இந்த போட்டியில் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய அந்த அணி களமிறங்கியது.

அதன்படி களமிறங்கிய குஜராத் அணி விஜய் சங்கர் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரின் ஆட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. பின்னர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் இறுதி கட்டத்தில் 4 ஓவருக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அடுத்த ஓவரை வீசிய கேப்டன் ரஷீத் கான் அதிரடி வீரர் ரசல், நரைன், ஷர்துல் தாகூரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி தொடரின் முதல் ஹாட் ட்ரிக் விக்கெட்டை பதிவு செய்தார்.இதில் இருந்து கொல்கத்தா அணி தோல்வியை தழுவுவது நிச்சயம் என்ற நிலை ஏற்பட்டது.

அதோடு இறுதி 8 பந்தில் அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், 19-வது ஓவரின் இறுதி இரண்டு பந்துகளில் 6,4 என ரிங்கு சிங் விளாசினார். இதனால் இறுதி ஓவரில் 29 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. யாஷ் தயாள் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை உமேஷ் யாதவ் 1 ரன் எடுக்க 5 பந்தில் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அடுத்த 5 பந்துகளில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங் யாரும் நம்பமுடியாத இடத்தில இருந்து அணியை வெற்றிபெற வைத்தார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.

அதன் பின்னர் ரிங்கு சிங் தற்போது வரை இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறார். கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கூட இறுதிப்பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டபோது 4 ரன் கள் விளாசி அணியை வெற்றிபெற வைத்தார். இந்த நிலையில், தோனி எனக்கு கொடுத்த இந்த அட்வைஸ் அவர்கள் கூறியதிலிருந்து முற்றிலுமே மாறுபட்டதாக இருந்தது என்றும், அதுவே சிறப்பாக செயல்பட காரணம் என்றும் ரிங்கு சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், " நான் தோனியை பார்த்தபோது நான் பேட்டிங் செய்யும்போது எப்படி செயல்பட வேண்டும் என்று அவரிடம் கேட்டேன். அதற்கு உனது திட்டத்தை எப்போதும் எளிமையாக வைத்துக்கொள். எந்த பந்தை வீசவேண்டும் என்பதை பௌலர் பார்த்துக் கொள்வார். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே. பந்து எப்படி வருகிறது என்பதில் உன் முழு கவனத்தையும் செலுத்தி உனக்கு எந்த பக்கம் ஆடினால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறதோ அதை செய் என்று தோனி கூறினார்.

பொதுவாக பலரும் பௌலர் பந்தை எப்படி பிடித்திருக்கிறார் என்பதை நன்றாக பார். குறிப்பிட்ட பௌலர் எத்தனை பந்துக்கு ஒருமுறை ஸ்லோ பந்து வீசுகிறார், வேகமான பந்து வீசுகிறார் என்று கவனி என்று கூறுவார்கள். ஆனால் தோனி எனக்கு கொடுத்த இந்த அட்வைஸ் அவர்கள் கூறியதிலிருந்து முற்றிலுமே மாறுபட்டதாக இருந்தது. அதுவே வெற்றிக்கு காரணம்" என்று கூறியுள்ளார்.

Also Read: அதிரடி ஆட்டத்திற்கு இவரின் ஆட்டம்தான் சிறந்த உதாரணம் -சென்னை வீரரை புகழ்ந்த பயிற்சியாளர் பிளமிங் !