Sports
இலங்கையில் ஆசிய கோப்பை போட்டிகள் ? விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு.. பலனளிக்காத பாகிஸ்தானின் சமரசம் !
கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.
இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தனது முடிவில் இந்தியா உறுதியாக இருந்த காரணத்தால் வேறுவழியின்றி பாகிஸ்தான் இறங்கிவந்து இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும், இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறினால் அதையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும் ஒப்புக்கொண்டு இது தொடர்பான அறிக்கையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது .
அதேநேரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்த முடிவுக்கு இதுவரை ஜெய் ஷா தலைமை வகிக்கும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பதிலளிக்கவில்லை என்றும், இந்த முறை ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் அல்லாது பொதுவான இடத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் செலவுகளை குறைப்பதற்காக இலங்கை அல்லது ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், ஆசிய கோப்பை பாகிஸ்தானில் இருந்து இடம் மாறினால் ஆசிய கோப்பை தொடரை புறக்கணிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசிவருகின்றனர்.
இந்த நிலையில், ஆசிய கோப்பை போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்தவேண்டும் என பிசிசிஐ ஒற்றைக்காலில் நிற்பதாகவும், பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு இலங்கை மற்றும் வங்காளதேச வாரியங்கள் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இலங்கையில் ஆசிய கோப்பை போட்டிகளை நடத்த பாகிஸ்தான் தவிர்த்த இதர கிரிக்கெட் வாரியங்கள் ஒப்புக்கொண்டதாகவும் இதனால் இலங்கையில் ஆசிய கோப்பை தொடர் நடப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. .
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!