Sports
”வீராங்கனைகளின் போராட்டம் நாட்டின் பெயருக்கு நல்லதல்ல” - PT உஷாவின் கருத்துக்கு சாக்ஷி மாலிக் கண்டனம் !
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பாஜக சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார்.இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளை செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதோடு இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாக பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர் என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டம் தொடர்பாக பேசிய பஜ்ரங் புனியா " இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் அனைவரும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பால் எங்களை சிறப்பாக நடத்தும் வரை தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள்" என்று அறிவித்தார். பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த போராட்டம் தோல்வியில் முடிந்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மல்யுத்த வீராங்கனைகள் சம்மதம் தெரிவித்தனர்.
மேலும், பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவவருமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீதான புகார் குறித்து விசாரிக்க ஒன்றிய விளையாட்டு துறை சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் இந்த வன்கொடுமைக்கு காரணமாக இருந்த பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி தற்போது மீண்டும் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும் முன்னாள் தடகள வீராங்கனையான பி.டி.உஷா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர் " எங்களிடம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் தெருக்களில் இறங்கிப் போராடியிருக்கலாம். ஆனால், எங்களிடம் எதுவும் கேட்காமல், தெருவில் இறங்கிப் போராடுவது விளையாட்டுத்துறைக்கு நல்லதல்ல. இந்த வகையான எதிர்மறை விளம்பரம், போராட்டம் நாட்டின் நற்பெயருக்கு நல்லதல்ல. மேலும், இது ஒழுக்கமின்மைக்குச் சமம். இந்த எதிர்மறை விளம்பரம் நாட்டுக்கு நல்லதல்ல" என்று கூறினார்.
அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அவரின் இந்த கருத்துக்கு மல்யுத்த வீராங்களை சாக்ஷி மாலிக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”பி.டி உஷாவின் கருத்து எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அவர் ஒரு பெண்ணாக இருந்தும் எங்களை ஆதரிக்கவில்லை. நாங்கள் என்ன ஒழுங்கீனம் செய்தோம்? நாங்கள் அமைதியாக இங்கே அமர்ந்திருக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைத்திருந்தால் இதை நாங்கள் செய்திருக்க மாட்டோம்” என கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!