Sports

அன்று தரையை துடைத்த பையன்.. இன்று 5 பந்தில் 5 சிக்ஸர்: ரிங்கு சிங் வளர்ந்து வந்த கதை உங்களுக்கு தெரியுமா?

நடப்பு ஐ.பி.எல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 5 பந்தில் 5 சிக்ஸர் விளாசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார் ரிங்கு சிங் அந்த அணியின்.

நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை அடித்திருந்தது.

பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி எளிதாக 205 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தவர் ரிங்கு சிங் என்ற வீரர்தான். 5 பந்தில் 28 ரன்கள் தேவை என்ற நிலையில், 5 பந்தில் 5 சிக்ஸர் விளாசிய இந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் தனது பெயரையும் கிரிக்கெட் உலகிற்குப் பதிவு செய்துள்ளார்.

தூய்மைப் பணியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரிங்கு சிங் தனது விடா முயற்சியிலும் கிரிக்கெட் மீது கொண்ட காதலால் தற்போது கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார்.

இந்த இடத்திற்குப் பல தடைகளைத் தாண்டிதான் வந்துள்ளார் ரிங்கு சிங். எளிய குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை சிலிண்டர்கள் விநியோகிக்கும் வேலை செய்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் போதிய வருமானம் இல்லை.

இதன்காரணமாக குடும்பத்திலிருந்த அனைவரும் ஒவ்வொரு வேலையைப் பார்த்து வந்துள்ளனர். அப்படி ரிங்கு சிங்கும் பயிற்சி மையம் ஒன்றில் தரையைச் சுத்தம் செய்யும் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். குடும்பம் ஏழ்மையாக இருந்தாலும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

இந்த கடின உழைப்புதான் அவரை 16 வயதில் 2012ம் ஆண்டு விஜய் மெர்சண்ட் டிராபிக்கு அழைத்துச் சென்றுள்ளது. தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பையை நன்றாகப் பயன்படுத்தி 154 ரன்களை அடித்து தனது பெயரை அடுத்த கட்டத்திற்கு நகரவைத்துள்ளார். இது அவரை உத்தர பிரதேசத்தின் 19 வயது அணியில் இடம் பெற வைத்தது.

பின்னர் முதல் முறையாக ஐ.பி.எல் தொடரில் 2017ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடினார். பின்னர் அடுத்த தொடரில் கொல்கத்தா அணி இவரை வாங்கியது. ஆனால் அவருக்கு விளையாட வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

இந்த சீசனில் ஸ்ரேஸ் ஐயர் காயம் காரணமாக இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை தான் 5 பந்தில் 5 சிக்ஸர் அடித்து தனது இடத்தை உறுதிபடித்தியுள்ளார் ரிங்கு சிங். இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் தற்போது ரிங்க சிங் எடுத்துக்காட்டாகியுள்ளார்.

Also Read: ”நீங்கள் ஒரு சாம்பியன்.. கட்டாயம் இதிலிருந்து மீள்வீர்கள்” -கொல்கத்தா அணி ட்வீட்டால் நெகிழும் ரசிகர்கள் !