Sports

"பந்துவீச்சாளர்கள் இதை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" -எம்.எஸ்.தோனி காட்டம் !

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இந்த நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதனைத் தொடர்ந்து ஆடிய சென்னை அணியில் ருத்துராஜ் சிறப்பான ஆட்டம் ஆடினார். நிலைத்து நின்று ஆடிய அவர் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், பிற வீரர்கள் அதிரடியாக ஆடாததன் காரணமாக சென்னை அணி 20 ஓவர்களில் 178 ரன்கள் மட்டுமே எடுத்து.

பின்னர் ஆடிய குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவந்தாலும், சுப்மன் கில் 63 ரன்களும், சாய் சுதர்சன் 23 ரன்களும், விஜய் சங்கர் 27 ரன்களும் குவிக்க இறுதிகட்டத்தில் ரஷித் கான் அதிரடி ஆட்டம் ஆடி அந்த அணியை இறுதி ஓவரில் வெற்றி பெற வைத்தார்.

இந்த போட்டி முடிந்த பின்னர் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, “ “பேட்டிங்கில் நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். ருத்துராஜ் கெய்க்வாட் மிக சிறப்பாக விளையாடினார், அவரது தனித்துவமிக்க பேட்டிங்கை வெளியில் இருந்து பார்ப்பதும் ஒரு அழகு தான். அவர் தேர்வு செய்யும் ஷாட்களை பாராட்டியே ஆக வேண்டும். இளம் வீரர்கள் தாங்களாக முன்வந்து தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். நோ-பால்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தெரிவித்தார்.

Also Read: மாந்திரீக பூஜைகள் செய்வதாக ரூ.65 லட்சம் மோசடி.. 10 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தை ஏமாற்றி வந்த மர்ம கும்பல்!