Sports
FIFA: உலகின் நம்பர் 1 அணியை வீழ்த்திய மொரோக்கோ.. 5 முறை உலகசாம்பியனான பிரேசிலை வீழ்த்தி வரலாற்று சாதனை!
22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரில் யாரும் எதிர்பாராத அணியாக இருந்த மொரோக்கோ வலுவான பெல்ஜியம், ஸ்பெயின், போர்த்துக்கல் அணிகளை வீழ்த்தி வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணியாக சாதனை படைத்தது. அரையிறுதியில் தோல்வியைத் தழுவினாலும் அனைத்து தரப்பினரும் அந்த அணியின் ஆட்டத்தை பாராட்டினர். அந்த அளவு அந்த அணியின் போராட்டம் இருந்தது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற நட்பு ரீதியிலான போட்டியில் 5 முறை உலகக்கோப்பையை வென்ற அணியும் ஃபிபா தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பிரேசில் அணியும் மொரோக்கோ அணியும் மோதின. மொரோக்கோவின் பெரிய மைதானமாக டான்ஜியர் சிட்டியிலுள்ள இபின் படோடா மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.
ஆரம்பத்தில் இருந்தே ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்த போட்டியின் 29ஆவது நிமிடத்தில் மொரோக்கோ மிட்-பீல்டர் சோபியான் பௌஃபல் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்து அசத்தினார். அதன்பின்னர் பிரேசில் அணி பதில் கோல் அடிக்க முயற்சித்தும் முதல் பாதியில் அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் முதல்பாதி 1-0 என முடிவடைந்தது.
பின்னர் இரண்டாவது பாதியில், பிரேசில் வீரர்கள் தாக்குதல் ஆட்டம் ஆடிய நிலையில், அதற்கு பலன் கிடைத்தது. ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் கேசமிரோ பதில் கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலைக்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து பிரேசில் வீரர்கள் அடிக்கடி கோல் அடிக்க முயற்சித்த நிலையில், ஆட்டத்தின் 79ஆவது நிமிடத்தில் மொரோக்கோவின் அப்தெல்ஹமிட் சபிரி கோல் அடிக்க அரங்கமே அதிர்ந்தது. இதற்கு பிரேசில் அணியால் இறுதிவரை பதில் கோல் அடிக்கமுடியாத நிலையில், 2-1 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியை பல்வேறு தரப்பினரும் புகழ்ந்து வருகின்றனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!