Sports

"இந்த தோல்வியிலிருந்து பாடம் கற்க வேண்டும்.. ஏனெனில்.." -உலகக்கோப்பை குறித்து கவாஸ்கர் எச்சரிக்கை !

நடந்து முடிந்த இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.பின்னர் ஆடிய இந்திய அணியில், தொடக்க வீரர்கள் அடுத்தடுத்த ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. பின்னர் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல்- ஜடேஜா இணை இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெறவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டணத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர் மிச்சேல் ஸ்டார்க்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. கோலி, ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் இரட்டை இலக்க ரன்களை எடுக்க இந்திய அணி ஒருவழியாக 100 ரன்களை கடந்து 26 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. இதனால் வெறும் 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் குவித்த அந்த அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்தது.

அதன்பின்னர் மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 49 வர்களில் 269 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா, குல்தீப் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. ஆனால் 185 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தபோது அடுத்தடுத்த பந்தில் கோலி, சூரியகுமார் ஆட்டமிழக்க ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. இறுதியில் இந்திய அணி 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த தொடரில் இந்திய அணியில் தோல்வியைத் தொடர்ந்து பல்வேறு முன்னாள் வீரர்களும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் உலககோப்பையில் ஆஸ்திரேலியாவை இந்தியா சந்திக்க நேரிடும் என்பதால், இந்த கடைசிபோட்டியிலிருந்து இந்தியா பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியதால் இந்திய வீரர்களால் பவுண்டரிகளும் அடிக்க முடியவில்லை, சிங்கிள்ஸ்களும் எடுக்க முடியவில்லை. இது போன்ற போட்டிகளில் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினால் மட்டுமே இலக்கின் அருகிலாவது செல்ல முடியும்.

விராட் கோலி, கே.எல்.ராகுல் அமைத்த பார்ட்னர்ஷிப் போல் மற்றொரு பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தால் இந்திய அணி வென்றிருக்கும். இன்னும் ஒரு வாரத்தில் ஐபிஎல் தொடர் தொடங்க இருப்பதால், இந்திய வீரர்கள் இந்த தோல்வியை மறந்துவிடக்கூடாது. உலககோப்பையில் ஆஸ்திரேலியாவை இந்தியா சந்திக்க நேரிடும் என்பதால், இந்த கடைசிபோட்டியிலிருந்து இந்தியா பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Also Read: "எதை செய்யக் கூடாது என்பதை தென்னக ரயில்வே பயில்வது நல்லது": 100% இந்தி சுற்றறிக்கைக்கு மதுரை MP ஆவேசம்!