Sports
"இந்திய அணி உச்சத்துக்கு செல்ல விதை போட்டவர் இவர்தான்" -முன்னாள் இந்திய வீரரை புகழ்ந்த பாகிஸ்தான் வீரர் !
இந்திய அணியின் முக்கிய அடையாளமான கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் கட்டமைப்பாளராக புகழப்படுகிறார். 90-களின் இறுதியில் இந்திய அணியை சூதாட்ட புகார் சிதைத்த நிலையில், கேப்டன் அசாரூதினுக்கு தடைவிதிக்கப்பட்டது. மூத்த வீரரான சச்சின் கேப்டனாக்கப்பட்டார். சச்சின் தலைமையில் இந்தியா தோற்றதோடு , சச்சின் எனும் ஆகச்சிறந்த வீரரின் பேட்டிங்கும் தடைபட்டது.
இதனால் சச்சினே கங்குலி கேப்டனாகட்டும் என்று பரிந்துரைத்து வழிவிட்டு நின்ற பின்னர் கேப்டனான கங்குலி அணியில் பழைய வீரர்களை ஓரங்கட்டிவிட்டு, புதிய வீரர்களைக் கொண்டுவந்தார் கங்குலி. அதன்பிறகே இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலம் உருவானது . உலகச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை அந்த நாட்டிலேயே வென்றது. எட்டாவது இடத்தில் இருந்த இந்திய அணியை இரண்டாவது இடத்துக்குக் கொண்டுவந்தார் கங்குலி.
லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தின் இமாலய இலக்கான 326 ரன்களை அபாரமாக நாட்வெஸ்ட் கோப்பை இறுதிப் போட்டியில் சேஸ் செய்தது இந்திய அணி. வெற்றிக்கான ரன்களை குவித்ததும் அனைவரது கண்களும் லார்ட்ஸ் மைதான பால்கனியை நோக்கி பாய்ந்தது. இந்திய கேப்டன் கங்குலி டி-ஷர்ட்டை கழற்றி கம்பீரமாக சுற்றியது உலக கிரிக்கெட் வரலாற்றின் இன்றியமையாத ஒன்றாக பதிவானது. லார்ட்ஸ் மைதான பால்கனியை 90-ஸ் கிட்ஸின் நாஸ்டாலஜியாக மாற்றியவர் கங்குலி !
கங்குலி தலைமையில் இந்திய அணி முக்கியமான வெற்றிகளை குவித்தது. 1983க்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு கங்குலி தலைமையிலான இந்திய அணி சென்றது. இறுதிப்போட்டியில் தோற்றாலும், வலிமையான இந்திய அணியை வீழ்த்துவது கடினம் என்ற மனநிலையை மற்ற அணிகளின் மனதில் விதைத்தார் கங்குலி.
அவர் உருவாக்கிய யுவராஜ், தோனி, சேவாக், ஹர்பஜன் போன்ற வீரர்களே அடுத்த 10 ஆண்டுகள் இந்திய அணியின் நட்சத்திரமாக ஜொலித்தனர். இதன் காரணமாக இந்திய அணியின் வடிவமைப்பாளராக கங்குலி கருதப்படுகிறார். இந்த நிலையில், இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல விதை போட்டவர் கங்குலிதான் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஃஸ் கூறியுள்ளார்.
கங்குலி தலைமையிலான இந்தியா, தோனி தலைமையிலான இந்தியா, கோலி தலைமையிலான இந்தியா என மூன்று தலைமுறை வீரர்களுக்கு எதிராகவும் விளையாடியுள்ள முகமது ஹபீஸிடம் யார் தலைமையிலான இந்திய அணி சிறந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தற்போது இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் அடித்தளம் போடப்பட்டது கங்குலி காலத்தில் தான். அப்போதுதான் இந்திய அணியால் உலகின் எந்த அணியையும் வெல்ல முடியும் என்ற எண்ணம் அவர்களுக்குள் உருவானது.
உலகின் எந்த இடத்துக்கும் சென்று, எதிரணி வீரர்களின் கண்களைப் பார்த்து ஆக்ரோஷமான கிரிக்கெட் விளையாடக்கூடிய ஒரு அணியாக கங்குலி காலத்தில்தான் இந்திய அணி மாறியது. அதற்கு பிறகு அந்த மாற்றத்தின் அடுத்த லெவலாக தோனி கேப்டனாக இருந்தபோது காணப்பட்டது, அது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து விராட் கோலி கைகளிலும் வந்து சேர்ந்தது. பிறகு எந்தவொரு தொடராக இருக்கட்டும் அல்லது போட்டியாக இருக்கட்டும் எல்லோருக்கும் பிடித்தமான அணியாக இந்தியா மாறியது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?