Sports

"அந்த பையன் எவ்ளோ முக்கியம் என்று இந்தியா இப்போது புரிந்திருக்கும்" -ஆஸ். முன்னாள் வீரர் கருத்து !

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்கவைத்தது. மேலும் 4 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது

அதனைத் தொடர்ந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. தோல்வியின்பிடியில் இருந்து மீண்டு இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இருந்தே அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி இந்தியாவை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது.

மூன்றே நாளில் முடிந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், விபத்து காரணமாக ஏற்பட்ட காயத்தால் ஓய்வில் இருந்து வரும் ரிஷப் பண்ட் இல்லாததே இந்திய அணியின் தோல்விக்கான முக்கிய காரணம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயன் சேப்பல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட்டின் பங்கு மிக முக்கியமானது. பலமுறை இந்திய அணிக்காக போட்டியை வெண்றுகொடுத்துள்ளார். அவர் தற்போது இல்லாதது இந்திய டெஸ்ட் அணிக்கு ஏற்பட்ட பெரும் பின்னைடவாகும். ரிஷப் பண்ட் அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பது இப்போது இந்திய அணிக்கும் புரிந்திருக்கும்" எனக் கூறினார்.

Also Read: கோலாகலமாக தொடங்கிய மகளிர் IPL.. மும்பை அணி இமாலய வெற்றி.. குஜராத் மானத்தை காப்பாற்றிய தமிழக வீராங்கனை!