Sports

அர்ஜென்டினா அணியினருக்கு தங்க IPhone-ஐ பரிசாக வாரி வழங்கிய வள்ளல் Messi.. அதிர்ந்துபோன இணைய உலகம் !

22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

முதல் 70 நிமிடம் ஆடுவது பிரான்ஸ் அணிதானா என்ற கேள்வி எழும் வகையில் அந்த அணி மிகமோசமாக ஆடியது. அர்ஜென்டினாவில் அதிரடிக்கு முன்னர் பிரான்ஸ் அணியால் நிற்கவே முடியவில்லை. ஆனால், அதன்பின்னர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.

90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது.உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றதில் உலகத்தில் உள்ள மூளை முடுக்கில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர்.

அர்ஜென்டினாவிலும் கொண்டாட்டம் உச்சத்தை அடைந்தது. கோப்பையை வென்றபின்னர் அர்ஜென்டினா வீரர்கள் தங்கள் தாயகம் திரும்பியதும் அவர்களுக்கு பல லட்சம் வீரர்கள் சாலையில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், உலகக்கோப்பை வென்ற புகைப்படத்தை மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதும் அது உலகத்திலேயே அதிக லைக்குகள் பெற்ற புகைப்படமாக மாறியது.

இந்த நிலையில், உலகக்கோப்பையை வென்று தனது 16 வருட ஏக்கத்தை தீர்த்துவைக்க காரணமா இருந்த சக அர்ஜென்டினா அணியில் விளையாடிய வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 35 பேருக்கு, தங்க முலாம் பூசப்பட்ட ஐஃபோன் 14-களை பரிசாக வழங்கி மெஸ்ஸி அசத்தியுள்ளார்.

அர்ஜென்டினா அணி, 36 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை வென்றதன் நினைவாக வீரரின் பெயர், ஜெர்ஸி எண், அணியின் லோகோ ஆகியவற்றை அந்த ஐஃபோனில் பொறித்து வெற்றியின் நினைவாக இந்த மிகப்பெரிய பரிசை அளித்துள்ளார். புகழ்பெற்ற பார்சிலோனா, பி.எஸ்.ஜி ஆகிய கிளப் அணிகளுக்கு ஆடி பல மில்லியன் டாலர்களை சம்பாதித்த மெஸ்ஸி உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "விபத்திற்குப் பிறகு இந்த சின்ன செயல்கூட எனக்கு சாதனையாக தெரிகிறது" - ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி !