Sports
"உணர்ச்சிப்பூர்வமாக யோசிப்பதை விட நம் பொருளாதாரத்தை பார்க்க வேண்டும்" -பாக். வாரியத்துக்கு அப்ரிடி ஆலோசனை
கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.
இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.
அதோடு அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா ஆசிய கோப்பைக்கு இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால்,இந்தியாவில் நடைபெறூம் உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்ய மாட்டார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
அதே நேரம் ஐசிசி நடத்தும் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காமல் போனால் பாகிஸ்தானுக்கு ஐசிசி மூலம் கிடைக்கும் உதவிகள் நிறுத்தப்படும். அவ்வாறு நடைபெற்றால் அது பாகிஸ்தான் கிரிக்கெட்க்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.இந்த நிலையில், உணர்ச்சிப்பூர்வமாக யோசித்தால் இந்தியாவுக்கு பாகிஸ்தான் செல்லக்கூடாது என நானும் கூறுவேன். ஆனால் நம்முடைய பொருளாதாரத்தையும் பார்க்க வேண்டும் என அந்நாட்டு முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "சொந்த காலில் எந்தவித பிரச்சினையும் இன்றி நிற்கக்கூடியவர்களால் தான் தைரியமான முடிவுகளை எடுக்க முடியும். அந்தவகையில் இந்தியா தன்னை பலமான வாரியமாக மாற்றிக்கொண்டது. இதனால் தான் தைரியமாக அறிவித்து வருகின்றனர். ஆனால் நிதி நிலைமை குறித்த விவகாரத்தில் பாகிஸ்தான் சற்று யோசிக்க வேண்டியுள்ளது. ஐசிசியின் தலையீடு இந்த விவகாரத்தில் ஐசிசி நிச்சயம் தலையிட்டே ஆக வேண்டும். ஆனால் பிசிசிஐ-க்கு எதிராக ஐசிசி எந்தவொரு முடிவையும் எடுக்காது என்பது தெரிந்த விஷயம் தான்.
எனவே இந்த விஷயத்தில் மிகவும் அழுத்தமான முடிவை எடுப்பது அவசியமாகும். உணர்ச்சிப்பூர்வமாக யோசித்தால் இந்தியாவுக்கு பாகிஸ்தான் செல்லக்கூடாது என நானும் கூறுவேன். ஆனால் நம்முடைய பொருளாதாரத்தையும் பார்க்க வேண்டும். அதனை யோசித்து பார்த்தால் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கக்கூடாது என்பது தெரியும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!