Sports
ஸ்மிருதி மந்தனாவுக்கு ரூ.3.40 கோடியை கொட்டிக்கொடுத்த பெங்களூரு அணி.. களைகட்டும் மகளிர் IPL ஏலம் !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
ஆண்களுக்கான ஐபிஎல் பாணியில் பெண்களுக்கான ஐபிஎல் தொடரை நடத்தவும் பிசிசிஐ அமைப்பு திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 5 அணிகள் கலந்து கொள்ளும் இந்ததொடரின் அனைத்து ஆட்டங்களும் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் மகளிர் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான டிவி மற்றும் டிஜிட்டல் உரிமையை வயகாம் 18 நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.951 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இதன்மூலம் உலகளவில் அதிக மதிப்புடைய பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு தொடராக மகளிர் ஐபிஎல் மாறியுள்ளது. இது ஆண்கள் பாகிஸ்தான் பிரீமியர் லீக்கின் மதிப்பை விட சுமார் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த மகளிர் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 4ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என 5 அணிகள் இந்த தொடரில் களமிறங்குகின்றன.
இதற்கான ஏலம் இன்று நடைபெற்றுவரும் நிலையில் தற்போதுவரை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை 3.40 கோடிக்கு ஏலத்தில் பெங்களூரு அணி எடுத்தது.
மேலும், இந்திய வீராங்கனைகளான ஹர்மன்பிரீட் கவுர் 1.80 கோடிக்கும், தீப்தி சர்மா 2.60 கோடிக்கு, ஷபாலி வர்மா 2 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். தற்போது மகளிர் ஐபிஎல் ஏலம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!