Sports

"இந்திய துணை கேப்டன் ஆகும் தகுதி அஸ்வினுக்குதான் இருக்கிறது"- முன்னாள் இந்திய வீரர் கருத்து !

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக திகழ்பவர் கே.எல்.ராகுல். கர்நாடகத்தை சேர்ந்த இவர் உள்நாட்டு தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். இந்தியாவுக்காக மூன்று விதமான போட்டியிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.

கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக பல்வேறு தொடர்களில் அணியை வழிநடத்தியுள்ளார். மேலும், தற்போது அணியின் துணை கேப்டனாகவும் வளம் வருகிறார். ஆனால், சமீப காலமாக அவரின் பார்ம் மிக மோசமாக அமைந்துள்ளது. கில்,இஷான் கிஷன் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்து கிடக்க பிசிசிஐ பல்வேறு சந்தர்ப்பங்களில் ராகுலுக்கே அணியில் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட தொடக்க வீரராக கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் 20 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதே நேரம் சமீபத்தில் ஒருநாள்,டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடியவரும் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் ஜொலித்த இளம்வீரருமான கில் கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு காரணமாக வெளியே அமரவைக்கப்பட்டார்.

இந்த நிலையில், தொடர்ந்து சொதப்பி வரும் கே.எல்.ராகுலுக்கு பதில் கில்லுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும், கே.எல்.ராகுலுக்கு பதில் இந்திய அணிக்காக தொடர்ந்து பல வருடங்கள் சிறப்பாக ஆடிவரும் அஸ்வினை இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கவேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

மேலும், இது தொடர்பாக பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், அஸ்வினுக்குத்தான் இந்திய துணை கேப்டன் ஆகும் தகுதி இருப்பதாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கே.எல்.ராகுல் கடந்த 8 ஆண்டுகளாக இந்திய அணியில் இருந்து இதுவரை பெரிய அளவில் எதையும் சாதிக்கவில்லை. அவருக்கு கொடுக்கப்படும் வாய்ப்பு போல் சமீபத்தில் எந்த வீரருக்கும் அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுத்ததில்லை. ஆனால் ராகுல் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

பேட்டிங் செய்யாமல் இருக்கும் கே.எல்,ராகுலுக்கு இந்திய டெஸ்ட் அணையின் துணை கேப்டன் பதவியை கொடுத்து நிலைமையை பிசிசிஐ சிக்கல் ஆக்கிவிட்டது. இதனால் அவரை அணியில் இருந்து நீக்கவும் முடியவில்லை. இந்தியாவில் கிரிக்கெட் தொடர்பாக சிறப்பாக யோசிக்கும் மூளை அஸ்வினுக்கு தான் இருக்கிறது. இதனால் அவருக்குதான் இந்திய துணை கேப்டன் ஆகும் தகுதி உள்ளது. ஒரு வேலை அஸ்வின் வேண்டாம் என நினைத்தால் புஜாராவுக்கும், ஜடேஜாவுக்கும் வாய்ப்பு வழங்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.