Sports

சிறந்த T20 வீரருக்கான ICC விருது.. முதல் முறையாக விருது வென்று அசத்திய இந்திய வீரர்.. குவியும் பாராட்டு !

சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சூரியகுமாரை நம்பியே களமிறங்கியது என்று சொல்லும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். அவரும் விராட் கோலியும் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்திலும், சூரியகுமார் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் மூன்றாவது போட்டியிலும் சூரியகுமார் யாதவ் ருத்ரதாண்டவம் ஆடினார். 51 பந்துகளின் 9 சிக்ஸர்களுடன் 112 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார். அவரின் அதிரடி காரணமாக அந்த போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் டி20 போட்டியில் தனது 3-வது சதத்தை அவர் நிறைவு செய்துள்ளார். மேலும், இந்தியாவில் தனது முதல் சதத்தையும் சூரியகுமார் யாதவ் விளாசியுள்ளார். ரோஹித் சர்மா மொத்தம் 4 சதங்களோடு முதல் இடத்தில இருக்கும் நிலையில் சூரியகுமார் தற்போது 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அதோடு கடந்த 2022-ம் ஆண்டில் 31 டி20 போட்டிகளில் 46.56 சராசரி மற்றும் 187.43 ஸ்ட்ரைக் ரேட்டில் 1164 ரன்கள் எடுத்துள்ளார்.இதன்மூலம் ஒரு வருடத்தில் 20 ஓவர் போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை சூரியகுமார் பெற்றுள்ளார். இதன் காரணமாக தற்போது, 2022ஆம் ஆண்டின் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதுக்கு சூர்ய குமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: அமெரிக்கா சென்றும் திருந்தாத இந்தியர்கள்.. சாதிய பாகுபாடுக்கு எதிராக சியாட்டில் நகரில் அவசர சட்டம் !