Sports
”ரோஹித் ஷர்மா அதை செய்திருக்கக்கூடாது, அவரை வெளியே அனுப்பியிருக்க வேண்டும்” -இயான் சாப்பல் காட்டம் !
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்படத் தொடங்கிய இந்த ஒரு வருடத்தில், அசத்தலாக செயல்பட்டிருக்கிறார் ரோஹித் ஷர்மா. ஆங்காங்கே சில தவறுகள் நடந்திருந்தாலும், பல விஷயங்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த சர்வதேச டி20 உலகக் கோப்பை, ஆசிய கோப்பை போன்ற தொடர்களை தவறவிட்டிருந்தாலும், பல்வேறு பைலேட்டரில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை அவர் தலைமையில் வென்றிருக்கிறது இந்திய அணி. அதும் குறிப்பாக இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மிகப் பெரிய வெற்றிகளைக் குவித்தது இந்தியா. விராட் கோலி போல் களத்தில் அக்ரஸிவான கேப்டனாக இருக்காவிட்டாலும், வெறியோடு அணியை வழிநடத்திக்கொண்டுதான் இருக்கிறார் ரோஹித் ஷர்மா.
ஆனால் சமீப காலமாக ரோஹித்தின் கேப்டன்சி மீது பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. சர்ச்சைகளில் இருந்து எப்போதும் தொலைவிலேயே இருந்திருக்கிறார் ஹிட்மேன். ஆனால் சமீபத்தில் அவருடைய ஒரு முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா, இலங்கை அணிகள் மோதிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், இலங்கை கேப்டன் தசுன் ஷனகா நான் ஸ்டிரைக்கர் எண்டில் இருந்தபோது கிரீஸுக்கு வெளியே சென்றதால் அவரை ரன் அவுட் செய்தார் பௌலர் முகமது ஷமி. அப்போது சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ஷனகா விதிப்படி அவுட். ஆனால், இந்திய கேப்டன் ரோஹித்தோ அப்பீலைத் திரும்பப் பெற்று, ஷனகாவை மீண்டும் விளையாட அழைத்தார். அதன்பிறகு சதத்தை நிறைவு செய்தார் ஷனகா. இருந்தாலும் 67 ரன்கள் வித்தியாசத்தில் அந்தப் போட்டியில் தோல்வியடைந்திருந்தது இலங்கை. இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், ரோஹித் ஷர்மாவின் முடிவு பெரிதாக விமர்சிக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு 5 நாள்கள் முன்பு தான் பிக் பேஷ் லீகில், ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா ஒரு பேட்ஸ்மேனை நான் ஸ்டிரைக்கர் எண்டில் ரன் அவுட் செய்ய முற்பட்டார். ஆனால் அவர் பௌலிங் ஆக்ஷனைத் தொடங்கிவிட்டதால், அது நாட் அவுட் என்று அறிவித்தார் மூன்றாவது நடுவர். அடுத்தடுத்து ஒரு வார இடைவெளியில் இந்த சம்பவங்கள் நடந்த நிலையில், இதுபற்றிப் பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சாப்பால், இதற்காக சில விதிகள் இருக்குமெனில், அவை அனைத்தையும் பின்தொடரவேண்டும் என்று கூறியிருக்கிறார் அவர்.
"கிரிக்கெட்டில் இரண்டு பெரிய சர்ச்சைகள் இருக்கின்றன. ஒன்று - நான் ஸ்டிரைக்கர் எண்டில் செய்யப்படும் ரன் அவுட்கள். மற்றொன்று மூன்றாவது நடுவரிடம் செல்லும் கேட்ச் அப்பீல்கள். இவை இரண்டும் ஒவ்வொரு முறையும் பெரிய சர்ச்சைகளை கிளப்பிக்கொண்டே இருக்கின்றன. இவையெல்லாம் பல காலம் முன்பே சரிசெய்திருக்கப்படவேண்டும். நான் ஸ்டிரைக்கர் எண்ட் ரன் அவுட்கள் எப்போதே தீர்த்திருக்கவேண்டியது. இதற்கான ஒரிஜினல் விதியே போதுமானதாக இருந்திருக்கும். அதை மாற்றியிருக்கவேண்டிய அவசியமே இல்லை. ஒரு பிரச்னைக்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன என்பதை இது மீண்டும் ஒரு முறை உணர்த்தியிருக்கிறது. இவை எளிதானவை தான். ஆனால், ஒவ்வொரு முறையும் தவறாக அனுகப்பட்டுக்கொண்டிருக்கிறது" என்று ஒரு பத்திரைக்குக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் இயான் சேப்பல்.
"கிரிக்கெட் எப்போதுமே கடினமான முடிவுகளையே தேர்வு செய்கிறது. கிரீஸுக்கு வெளியே வரும் நான் ஸ்டிரைக்கருக்கு வார்னிங் கொடுக்காமல் ரன் அவுட் செய்வது எந்த வகையிலும் தவறு இல்லை. ஒரு ஃபீல்டர் தான் கேட்ச் பிடித்ததாகத் தெரிந்து ஒரு கேட்சுக்கு அப்பீல் செய்யும்போது அதை ரசிகர்கள் 'boo' செய்வதும் தவறு. இலங்கைக்கு எதிராக கவுஹாத்தியில் நடந்த ஒருநாள் போட்டியில், தசுன் ஷனகாவை பௌலர் ரன் அவுட் செய்தபோது, ரோஹித் ஷர்மா அதை ஆதரித்திருக்கவேண்டும். அதை அவர் திரும்பப் பெற்றிருக்கக்கூடாது" என்று கூறினார் இயான் சேப்பல்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?