Sports
ஒடிசாவில் நடக்கும் உலகக்கோப்பை ஹாக்கி தொடர்.. 48 ஆண்டு கால ஏக்கத்தை தீர்க்குமா இந்திய அணி ?
விளையாட்டு உலகின் மற்றொரு உச்சபட்ச திருவிழாவான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவில் நாளை தொடங்குகிறது. 48 ஆண்டு கால இந்தியாவின் கோப்பை ஏக்கம் சொந்த மண்ணில் தீர்க்கும் வேட்கையில் தொடருக்கு தயாராகியுள்ளது இந்திய அணி.
ஒலிம்பிக் தொடருக்கு அடுத்த மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலகக்கோப்பை. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நடப்பாண்டு இந்தியாவில் ஜனவரி 13 முதல் 29ஆம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் நடைபெறவுள்ளது. முதல்முறையாக உலகக்கோப்பை தொடரை இரண்டு நகரங்களில் நடத்துவதற்கு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அனுமதி அளித்ததை அடுத்து ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய இரண்டு நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.
உலகக்கோப்பை ஹாக்கி தொடரை ஒடிசா தொடர்ந்து நடத்துவது இது இரண்டாவது முறையாகும். கடந்த உலகக்கோப்பை தொடரை ஒடிசா மிக சிறப்பாக நடத்தியதன் அடிப்படையில், மீண்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஹாக்கியின் மையம் என்றழைக்கப்படும் ஒடிசா இந்த தொடரை நடத்த பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது.
சுமார், 1500 கோடி ரூபாய் அளவிற்கு சர்வதேச தரத்தில் அனைத்து வசதிகளையும் தயார் செய்துள்ளது. குறிப்பாக, ரூர்கேலா நகரில் பிரத்யேகமாக புதிய மைதானம் தொடருக்காக உருவாக்கப்பட்டு, சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் ரசிக்கும் வகையில் உள்ளது.
இந்திய ஹாக்கி அணிக்கு ஒடிசா ஸ்பான்ஷர்ஷிப் ஆக இருந்து வரும் நிலையில், இம்முறை இந்திய அணி தொடருக்காக முழுமையாக தயாராகியுள்ளது. தொடரை நடத்தும் நாடான இந்தியா, நடப்பு சாம்பியனான பெல்ஜியம், ஆஸ்திரேலியா, ஸ்பெயின் உள்பட 16அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன.
4 முறை உலகக்கோப்பையை வென்றுள்ள பாகிஸ்தான் தொடரில் பங்கேற்காத நிலையில், தங்கள் தேசத்துக்காக முதல் உலகக்கோப்பையை உற்சாகத்துடன் எதிர்நோக்கியுள்ளது சிலி அணி. ஒரு பிரிவில் 4 அணிகள் என பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக காலிறுதுக்கு தகுதி பெறும். அடுத்த இடங்களை பிடிக்கும் அணிகள் மீண்டும் ஒருமுறை மோதி காலிறுதிக்குள் தகுதி பெறும்.
இந்திய ஹாக்கி அணியை பொறுத்தவரை ஒலிம்பிக்கில் 8 முறை தங்க பதக்கத்தை வென்று அசைக்க முடியாத அணியாக இருந்து வருகின்றது. ஆனால், உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ளது. இறுதியாக, 1975 தொடரில் இந்தியா தங்கம் வென்றிருந்தது. அதன் பிறகு 47 ஆண்டுகால உலக கோப்பையில் இந்தியா அரையிறுதிக்கு கூட தகுதி பெற்றதில்லை. ஆகையால், இந்த நீண்ட கால ஏக்கத்திற்கு இம்முறை தீனி போடுவதற்கு இந்திய அணி தயாராக இருக்கின்றது.
நடப்பு தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது. அடுத்தடுத்த ஆட்டங்களில் இங்கிலாந்து, வேல்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது. தொடக்கத்தை இந்தியா வெற்றியுடன் தொடங்கும் பட்சத்தில் இந்த முறை இந்தியா பதக்கப்பட்டியலில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணியை பொறுத்தவரை இம்முறை தொடருக்காக மிக தீவிரமாக தயாராகியுள்ளது. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகிகள் என தொடர் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடருக்கு முன்னோட்டமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியுள்ள் இந்தியா மிகவும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றது.
கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் முகமாகவும் இருக்கிறார். இதுதவிர, மன்பிரீத் சிங் ஹர்மன்ப்ரீத் சிங் போன்ற அனுபவ வீரர்களுடன் இளம் வீரர்களும் இந்த தொடரில் களமிறங்க காத்திருக்கின்றனர். உலகக்கோப்பை பிரஷரை சமாளிப்பதற்கு அனைத்து விதத்திலும் இந்தியா தயாராக இருப்பதாக கூறுகிறார் ஒலிம்பியன் பாஸ்கரன்.
செஸ் ஒலிம்பியாட் வெற்றியால் தமிழ்நாட்டில் சதுரங்கம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதோடு, விளையாட்டின் தலைநகரமாக சென்னை மாறி வருவதை பெருமையோடு சுட்டிக்காட்டியுள்ள பாஸ்கரன், இந்த உலகக்கோப்பை தொடர் மூலம் எதிர்காலத்தில் நிறைய ஹாக்கி வீரர்கள் உருவாகுவர் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரத்யேக புதிய மைதானம், எல்லை கடந்து விழிப்புணர்வு, பிரம்மாண்ட ஏற்பாடுகள் என விளையாட்டு ரசிகர்கள் சங்கமிக்கும் இடமாக விருந்தளிக்கிறது ஒடிசா மாநிலம். இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளுக்குமான டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்றுத்தீர்ந்துள்ள நிலையில், உலக சாம்பியன் யார்? என்ற உச்சகட்ட எதிர்பார்ப்போடு தொடரை கொண்டாட காத்திருக்கின்றது விளையாட்டு உலகம்.
- மீனா சடையாண்டி.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!