Sports
"ஶ்ரீநாத்துக்கு பிறகு இதுபோன்ற பந்து வீச்சை இந்த இளம்வீரரிடம்தான் பார்த்தேன்"- முன்னாள் வீரர் புகழாரம் !
2023ம் ஆண்டை சிறப்பாக தொடங்கியிருக்கிறது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி. இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரை 2-1 என வென்றது இந்தியா. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்த இளம் இந்திய அணி, அனைத்து ஏரியாக்களிலுமே சிறப்பாக செயல்பட்டது. இந்தத் தொடரின் மிகப் பெரிய சாதகங்கள் என்று பார்த்தால், ஷிவம் மாவியின் அற்புதமான அறிமுகம், ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை அக்ஷர் படேல் சிறப்பாக நிரப்பியது, சூர்யகுமார் யாதவின் அசுரத் தனமான பேட்டிங் போன்றவற்றைக் கூறலாம்.
தன்னுடைய அறிமுக போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷிவம் மாவி, இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவின் மிக முக்கியமான வீரராகத் திகழ்ந்தார். வான்கடே மைதானத்தில் மிகவும் பரபரப்பாக நடந்த அந்தப் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதேசமயம், பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என 3 ஏரியாக்களிலுமே சிறப்பாக செயல்பட்டு இந்தத் தொடரின் சிறந்த வீரராகத் திகழ்ந்தார் அக்ஷர் படேல். தொடர் நாயகன் விருதையும் அவரே வென்றார்.
வெற்றியோடு தொடரைத் தொடங்கினாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ். அதன்பிறகு, மிகமுக்கியமான மூன்றாவது போட்டியில் சதமடித்து அசத்தினார் அவர். அதன் விளைவாக, அந்தப் போட்டியையும் தொடரையும் இந்திய அணி வென்றது.
ஷிவம் மாவி, அக்ஷர் படேல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தவிர்த்து, இந்தியாவின் சமீபத்திய சென்சேஷனான வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கும் இந்தத் தொடரில் சிறப்பாகவே செயல்பட்டார். இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பௌலராகத் திகழ்ந்தார் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இந்த இளம் வீரர். இந்த 3 போட்டிகளில், 11 ஓவர்கள் பந்துவீசிய அவர், 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். விக்கெட்டுகள் வீழ்த்தியது மட்டுமல்ல, தன்னுடைய அதிவேகமான பந்துவீச்சையும் இந்தத் தொடரில் தொடர்ந்தார் அவர். இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் வீசிய ஒரு பந்தை மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் வீசியிருந்தார் அவர். இதுநாள் வரை ஒரு இந்திய பௌலர் வீசிய அதிவேகமான பந்து அதுதான்!
உம்ரான் மாலிக்கின் செயல்பாடு முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரிடமும் பாராட்டைப் பெற்று வருகிறது. இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் அஜய் ஜடேஜா அவரை புகழ்ந்திருக்கிறார். புகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் ஜாம்பவான் வேகப்பந்துவீச்சாளர் ஜவகல் ஶ்ரீநாத் உடன் அவரை ஒப்பிட்டும் பேசியிருக்கிறார்.
"உம்ரான் மாலிக் பந்து வீசும் விதத்தை, அவர் ஓடி வரும் விதத்தையெல்லாம் சமீப காலத்தில் வேறு எந்த வீரரிடமும் நான் பார்க்கவில்லை. கடைசியாக அதை ஶ்ரீநாத்திடம் தான் பார்த்தேன். இவர் ஒரு ஸ்பெஷல் பௌலர். இவரிடம் பல சிறப்புகள் இருக்கிறது. அதனால் அவரை அவருடைய சிறப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். டெய்ல் எண்டர்கள் வரும்போது, உம்ரான் மாலிக்கை சிறப்பாகப் பயன்படுத்தலாம். பத்தில், எட்டு முறை அவர் 3 விக்கெட்டுகளாவது வீழ்த்தி போட்டியை உங்களுக்கு முடித்துக் கொடுப்பார்" என்று ஒரு உரையாடலில் குறிப்பிட்டிருக்கிறார் அஜய் ஜடேஜா.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!