Sports
"நீங்கள் செய்தது குற்றம்,, இனி தவறு செய்யக்கூடாது" - இளம்வீரரை காட்டமாக விமர்சித்த ஹர்திக் பாண்டியா !
இந்தியா, இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தத் தொடரை 1-1 என சமன் செய்தது இலங்கை. தஷுன் ஷனகாவின் அதிரடி பேட்டிங்கும், ஆர்ஷ்தீப் சிங்கின் சரமாரியான நோ பால்களும் இந்தப் போட்டியின் முக்கிய பேசுபொருளாக இருந்தன. இலங்கை இன்னிங்ஸில், 2 ஓவர்கள் மட்டுமே வீசிய ஆர்ஷ்தீப், 5 நோ பால்கள் வீசியிருந்தார். அதைப் பற்றிக் கேட்டபோது, பூசி முழுகாமல் நேரடியாக அவரை விமர்சித்திருக்கிறார் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா.
கடந்த ஆண்டு, இந்திய கிரிக்கெட்டின் முக்கிய வரவாகக் கருதப்பட்டவர் ஆர்ஷ்தீப் சிங். ஆனால், இந்த சீசனில் அவர் ஆடிய முதல் போட்டியில் ரொம்பவே தடுமாறினார். உடல் நிலை சரியில்லாமல் இருந்தவர், மீண்டும் அணிக்குத் திரும்பியபோது தடுமாறினார். புனேவில் நடந்த இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் 5 நோ பால்கள் வீசினார் அவர். அதில் ஹாட்ரிக் நோ பால்களும் அடக்கம். அதைப் பற்றிப் பேசியபோது, நேரடியாகவே பதில் கூறியிருக்கிறார் ஹர்திக்.
"ஒருவருக்கு நல்ல நாளும் அமையும், மோசமான நாளும் அமையும். ஆனால் நீங்கள் உங்கள் அடிப்படையில் இருந்து விலகிச் சென்றுவிடக்கூடாது. இந்த சூழ்நிலை ஆர்ஷ்தீப்பைப் பொருத்த அளவுக்கு சற்று சிரமமானது தான். அவரை விமர்சிப்பதற்காகவோ, அவரிடம் கடுமையாக இருக்கவேண்டும் என்றோ இதைச் சொல்லவில்லை. ஆனால், எந்த ஃபார்மட்டிலுமே நோ பால்கள் வீசுவது குற்றம்" என்று போட்டிக்குப் பின்பான பரிசளிப்பு விழாவில் கூறினார் ஹர்திக் பாண்டியா.
2 ஓவர்கள் மட்டுமே வீசிய ஆர்ஷ்தீப் சிங், 37 ரன்கள் விட்டுகொடுத்தார். அதனால், இந்தப் போட்டியில் அவருடைய முழுமையான 4 ஓவர்களையும் கேப்டன் ஹர்திக் பயன்படுத்தவில்லை. ஒட்டுமொத்தமாக இந்திய அணி வீசிய 7 நோ பால்களில், ஐந்து ஆர்ஷ்தீப் வீசியதுதான். ஒரு சர்வதேச டி20 போட்டியில் தன் முதல் ஓவரில் தொடர்ச்சியாக 3 நோ பால்கள் வீசிய முதல் இந்திய பௌலர் ஆர்ஷ்தீப் சிங் தான்.
"பேட்டிங்கிலும் சரி, பௌலிங்கிலும் சரி, பவர்பிளே எங்களுக்கு சரியாக அமையவில்லை. நாங்கள் அடிப்படையிலேயே சில தவறுகள் செய்துவிட்டோம். இந்த பெரிய அரங்கில் அப்படியான தவறுகள் செய்யக்கூடாது. எங்களால் கட்டுப்படுத்த முடிந்த விஷயங்கள் மீது இனி கவனம் செலுத்தவேண்டும்" என்று கூறினார் ஹர்திக் பாண்டியா.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!