Sports
"இந்திய வீரர்களுக்கு ஓய்வே கொடுக்கக்கூடாது, அப்படி கொடுத்தாலும்.."- BCCI-க்கு கௌதம் கம்பீர் அட்வைஸ் !
ஒரு ஐசிசி தொடரை இந்தியா வென்று இந்த வருடத்தோடு 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக எம்.எஸ்.தோனியின் தலைமையில் 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்தது இந்திய அணி. 2014 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய அந்த அணி, 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2019 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களின் பைனல்களிலும் தோற்றது. கடந்த 2 உலகக் கோப்பைகளிலும் இந்திய அணியின் செயல்பாடு ஏமாற்றம் தரும் வகையில் தான் இருக்கிறது.
2021 டி20 உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுக்கே தகுதி பெறத் தவறிய இந்திய அணி. 2022ம் வருடம் ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில், அரையிறுதி வரை முன்னேறியது இந்தியா. ஐந்தில், நான்கு குரூப் போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியிருந்தாலும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது ரோஹித் அண்ட் கோ.
விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அடிக்கடி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு எடுத்தது தான் இந்திய அணியின் தடுமாற்றத்துக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் ஓப்பனர் கௌதம் கம்பீர்.
"இந்த வீரர்களெல்லாம் ஒன்றாக விளையாடவேண்டும். கடந்த 2 உலகக் கோப்பைகளிலும் இந்திய அணி செய்த பெரிய தவறு அதுதான். அந்த வீரர்கள் ஒன்றாக இணைந்து அதிக போட்டிகளில் விளையாடவில்லை. எத்தனை முறை இந்திய அணி அவர்களின் சிறந்த பிளேயிங் லெவனை போட்டிகளில் களமிறக்கியது. நிச்சயமாக இல்லை. நேரடியாக உலகக் கோப்பையில் தான் இந்தியாவின் சிறந்த பிளேயிங் லெவனை களமிறக்கியது இந்தியா. துருதிருஷ்டவசமாக அதுவும் நமது சிறந்த பிளேயிங் லெவன் இல்லை. 50 ஓவர் உலகக் கோப்பை இந்த வருடம் நடக்கவிருக்கும் நிலையில், அவர்கள் அதிக போட்டிகளில் இணைந்து விளையாடுவது அவசியம். அவர்கள் டி20 போட்டிகளிலோ, ஐபிஎல் தொடரிலோ ஓய்வெடுக்கட்டும். ஆனால், 50 ஓவர் போட்டிகளில் கட்டாயம் அவர்கள் விளையாடவேண்டும்" என்று கூறியிருக்கிறார் கௌதம் கம்பீர். ஒருவேளை முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என்று நினைத்தால், அவர்கள் சர்வதேச டி20 போட்டிகளிலோ, ஐபிஎல் தொடரிலோ ஓய்வு எடுத்துக்கொள்ளட்டும் என்றும் கூறியிருக்கிறார் கம்பீர்.
"ஒருவேளை 3 ஃபார்மட்களிலும் விளையாடும் வீரர்கள் ஓய்வு வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் நிச்சயம் எடுத்துக்கொள்ளட்டும். ஆனால் அவர்கள் சர்வதேச டி20 போட்டிகளிலோ, ஐபிஎல் தொடரிலோ ஓய்வு எடுக்கலாம். இதற்கு மேலும் ஒருநாள் போட்டிகளில் அவர்கள் ஓய்வு எடுக்கக்கூடாது. ஒருவேளை அது ஐபிஎல் அணிகளுக்கு பாதிப்பாக இருக்கும் என்று நினைத்தார்கள் என்றால், ஆகட்டுமே. இங்கு இந்திய கிரிக்கெட் தான் மிகவும் முக்கியம். ஐபிஎல் இரண்டாம் பட்சம் தான். ஒருவேளை இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால், அதுதான் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமான வீரர் ஐபிஎல் போட்டிகளைத் தவறவிடட்டுமே! ஐபிஎல் தொடர் ஒவ்வொரு வருடமும் வருகிறது. ஆனால் உலகக் கோப்பை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடக்கிறது. அதனால், என்னைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடரை வெல்வதை விட உலகக் கோப்பையை வெல்வது தான் முக்கியம்" என்று கூறினார் கம்பீர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!