Sports
இனி இந்திய வீரர்களுக்கு IPL கட்.. வருகிறது புதிய சோதனை.. BCCIயின் புதிய விதிமுறைகள் என்னென்ன?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ரிவ்யூ மீட்டிங் நேற்று மும்பையில் நடந்திருக்கிறது. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, கேப்டன் ரோஹித் ஷர்மா, தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லட்சுமண், தேர்வுக் குழு தலைவர் சேத்தன் ஷர்மா ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் இந்திய அணியின் டி20 உலகக் கோப்பை செயல்பாடு குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருந்தது இந்திய அணி. அதுபோக, வீரர்களின் வேலைப்பளு, ஃபிட்னஸ் போன்ற பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில், 20 வீரர்கள் கொண்ட பட்டியல் தயார் செய்திருப்பதாகவும், அந்த வீரர்களை உலகக் கோப்பை வரை பரிசோதிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
அந்த கூட்டத்தின் 5 முக்கிய அம்சங்கள் இங்கே...
மீண்டும் யோ யோ :
யோ யோ டெஸ்ட் மற்றும் டெக்ஸா டெஸ்ட் இரண்டும் வீரர்கள் தேர்வின் அம்சமாக இருக்கும் என்று பிசிசிஐ வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
20 வீரர்கள் கொண்ட பட்டியல் :
2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடக்கூடிய 20 வீரர்களை பிசிசிஐ ஏற்கெனவே தயார் செய்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உலகக் கோப்பைக்கு முன்பான தொடர்களில் இந்த வீரர்கள் ரொடேஷன் முறையில் வாய்ப்பு பெற்று, கவனிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த வீரர்கள் ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாட வெளியே அமரவைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. "இந்திய ஆண்கள் அணியின் எதிர்கால தொடர்கள், 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை அனைத்தையும் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட சில வீரர்களின் 2023 ஐபிஎல் பங்கேற்பை தேசிய கிரிக்கெட் அகாடமி கூர்ந்து கவனிக்கும்" என்று பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வீரர்களின் வேலைப்பளு :
காயம் காரணமாக ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் பும்ரா விளையாட முடியாமல் போக, அதனால் இந்திய அணி பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. தேசிய கிரிக்கெட் அகாடெமியிலேயே அதிக நேரத்தை செலவிட்டிருந்தாலும், தீபக் சஹாரும் அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு அணிக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார். இதைக் கருத்தில் கொண்டு, வீரர்களின் வேலைப்பளுவை தேசிய கிரிக்கெட் அகாடமி கவனிக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.
வளர்ந்துவரும் வீரர்கள் :
இந்த கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்டிருக்கும் இன்னொரு முக்கிய விஷயமாக, "வளர்ந்து வரும் இளம் வீரர்கள் குறிப்பிட்ட அளவுக்கான டொமஸ்டிக் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே தேசிய அணிக்கான தேர்வுக்கு கருத்தில் கொள்ளப்படுவார்கள்" என்று குறிபிடப்பட்டிருக்கிறது.
எந்த மாற்றமும் இல்லை :
இந்திய அணி எதிர்பார்த்த முடிவை கொடுக்காவிட்டாலும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோரை மாற்றப்போவதில்லை என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. "2022ம் ஆண்டின் செயல்பாடுகள் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்துக்கான திட்டங்களும் இதில் பேசப்பட்டன. இதில் எந்த மாற்றம் குறித்தும் விவாதிக்கப்படவில்லை" என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!