Sports
3 உலகக் கோப்பை.. 1281 கோல்கள்: 'கருப்பு முத்து' என்று புகழப்பட்ட பீலே சாதனைகளை திரும்பி பார்ப்போம்!
உலகமே 2023ஆம் ஆண்டை வரவேற்க உற்சாகமாக தயாராகி வருகிறது. ஆனால், 2022இன் இறுதியில் இருபதாம் நூற்றாண்டின் ஒரு சகாப்தத்தை நாம் இழந்திருக்கிறோம். கால்பந்து களம் மட்டுமல்ல, உலகத்தின் ஒவ்வொரு நாட்டிலும் இவர் பெயரை உச்சரிக்காத ஆளில்லை. ஆம், கால்பந்தின் கடவுளாக பார்க்கப்படும் பிரேசில் நாயகன் பீலேதான், சுமக்க முடியாத உலக சாதனைகளை சுமந்து கொண்டிருக்கும் நாயகன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பீலே, தன்னுடைய 82 வயதில் டிசம்பர் 29ஆம் தேதி இயற்கை எய்தினார்.
1940ல் பிறந்த பீலே, வறுமையின் பிடி, குடும்ப சூழ்நிலை, தந்தைக்கு கொடுத்த வாக்கு என பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் தன் முயற்சியால், 1958ல் தன்னுடைய 17வயதில் உலகக்கோப்பையில் பிரேசில் அணிக்கு விளையாட தகுதி பெற்றார். கால்பந்து களத்திற்கு அன்று தெரியவில்லை 17வயதான பீலே கால்பந்து களத்திற்கு கிடைத்த வரம் என்று.
பீலே-வின் 1958 உலகக்கோப்பை அரையிறுதி ஹட்ரிக் மற்றும் இறுதிப்போட்டியில் இரண்டு கோல்களால் முதல் முறையாக பிரேசில் உலக கோப்பையை கையில் ஏந்தியது.
தொடர்ந்து 1962 இல் காயத்தால் பீலே இரண்டு போட்டிகளில் விளையாடாத போதும், அந்தத் தொடரிலும் பிரேசிலுக்கு உலகக்கோப்பை பெற்று தந்தார்.
1970 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் பிரசில் அணிக்கு மீண்டும் தலைமை தாங்கிய 29 வயதான பீலே, கால்பந்து உலகின் அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளங்கையில் ஒளித்துக் கொண்டார்.
1970 உலகக் கோப்பையை மீண்டும் கையில் ஏந்திய பீலே மூன்று உலக கோப்பைகளை வசப்படுத்தி, 3 கோப்பைகளை வென்ற ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனைக்கு இன்றளவும் சொந்தக்காரராக உள்ளார்.
கால்பந்து களம் எப்போதும் இரண்டு சமகால ஜாம்பவான்களை ஆரோக்கியமாக ஒப்பிட்டு பேசும். பீலே - மரடோனாவின் சாதனைகள் ஒருவருக்கொருவர் ஆரோக்கியமாக போட்டி போட்டுக்கொள்ளும் அளவிற்கு மெச்சத்தகுந்தது.
2020 நவம்பரில் மரடோனா, இயற்கை எய்திய போது, "ஒரு நாள் நாம் இருவரும் சொர்க்கத்தில் கால்பந்து விளையாடுவோம்" என பீலே தன் உணர்ச்சி பொங்க வரிகளால் மரடோனாவை வழியனுப்பினார். இன்று பீலே-வின் மறைவை அடுத்து, இந்த வரிகள் அதிகம் பகிரப்படுகிறது.
பிரேசில் அணிக்காக 92 போட்டிகளில் விளையாடி 77கோல்கள் அடித்துள்ள நாயகன், ஒட்டுமொத்தமாக 1000க்கும் மேற்பட்ட கோல்கள் அடித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பீலே, 2018 ஃபிஃபா உலகக்கோப்பையை வீல்சேரில் அமர்ந்து கொண்டு ரசித்தார். அதன் பிறகு சிகிச்சைக்கு மருத்துவமனை சென்ற பீலேவிற்கு, 2021ல் பெருங்குடலில் இருந்த கட்டி அகற்றப்பட்டது.
இருப்பினும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத சூழலில் 2022 இல் மீண்டும் புற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பல்வேறு சாதனைகளை அரங்கேற்றிய ஜாம்பவான் தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களை அண்மைக்காலமாக பிடித்துக் கொண்டிருந்த சூழலில், டிசம்பர் 29ஆம் தேதி ஆன இன்று அவர் இயற்கை எய்தியதாக அவரது மகள் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டு இருக்கிறார்.
பீலேவின் இந்த மறைவு கால்பந்து களத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்தையுமே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 2023 வரவேற்க தயாராகிக் கொண்டிருந்த மக்கள் பீலேவின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியா துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
உலக கோப்பையை கையில் ஏந்தி வரலாறு படைத்த மெஸ்ஸியின் ஆனந்த கண்ணீர் மறைவதற்குள்ளேயே, மூன்று உலகக் கோப்பைகளை வென்ற நாயகனின் சோக கண்ணீர் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகினரிடையும் அவரது நினைவுகளை அசை போட வைத்துள்ளது. பிலேவின் மறைவிற்கு உலகத் தலைவர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை தங்களது இரங்கலையும், அவரின் சாதனைகளையும் இந்த நேரத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
பீலேவின் மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த வீரரான பீலே எனும் கருப்பு முத்து தான் ஜொலிப்பதை நிறுத்தி விட்ட போதிலும், எவராலும் மறக்க முடியாத பாரம்பரியத்தை விட்டு சென்றுள்ளார். நினைவுகள் மூல. பீலே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது அவரது பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு தருணமும் உணர்த்தும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!