Sports

கால்பந்து ஜாம்பவான் பீலே கவலைக்கிடம்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை: கண்ணீரில் ரசிகர்கள்!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் பீலே கடந்த ஆண்டு பெருங்குடலில் புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பிறகு அவர் தொடர்ந்து மருத்து கண்காணிப்பிலேயே இருந்து வருகிறார். மேலும் அவருக்கு கீமோ தெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்தே வருகிறது. கடந்த மாதம் இறுதியில் கூட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடலில் மற்ற பாகங்களிலும் புற்று நோய் பரவியுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் அவர் 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது இதயம், சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே ஜாம்பவான் பீலேவின் உடல் நிலை இருப்பதால் ரசிகர்கள் பலரும் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். மேலும் உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் அவர் குணமடைய வேண்டி வருகின்றனர்.

கால்பந்து ஜாம்பவான் பீலே 18 ஆண்டுகளில் 1363 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 1281 கோல்கள் அடித்துள்ளார். மூன்று முறை பிரேசில் நாட்டிற்கு உலகக் கோப்பை கால்பந்து கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

1977ம் ஆண்டு தனது 40 வயதில் கால்பந்து விளையாட்டிற்கு ஓய்வு கொடுத்தார். பிறகு 1995ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் பிரேசில் நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் பீலே இருந்துள்ளார்.

அதோடு 2012ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியை பீலேதான் தொடக்கிவைத்தார். இது விளையாட்டு உலகமே அவரை கவுரவிக்கும் விதமாக இருந்தது. நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா அணி கோப்பை வென்றதை அடுத்து 'உலகக் கோப்பைக்கு தகுதியானவர்தான் லியோனல் மெஸ்ஸி' என பீலே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “நான் கொடுத்த கடனை திருப்பி கொடு..” : அதிக ஏலம் எடுக்கப்பட்ட நிக்கோலஸ் பூரானிடம் கடனை வசூலிக்கும் கெயில்!