Sports

FIFA2022 -ஆர்வமிகுதியால் பெண் ரசிகர் செய்த செயல்.. மன்னித்து விடுமாறு கத்தாருக்கு நெட்டிசன்கள் கோரிக்கை !

22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

முதல் 70 நிமிடம் ஆடுவது பிரான்ஸ் அணிதானா என்ற கேள்வி எழும் வகையில் அந்த அணி மிகமோசமாக ஆடியது. அர்ஜென்டினாவில் அதிரடிக்கு முன்னர் பிரான்ஸ் அணியால் நிற்கவே முடியவில்லை. ஆனால், அதன்பின்னர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.

90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது.உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றதில் உலகத்தில் உள்ள மூளை முடுக்கில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றதும் மைதானத்தில் திரண்டிருந்த அர்ஜென்டினா ரசிகர்கள் கத்தி, கூப்பாடு போட்டு தங்கள் அணி வெற்றிபெற்றதை கொண்டாடினர். அப்போது அங்கிருந்த பல ஆண்கள் தங்கள் சட்டையை கழட்டி சுற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில், அர்ஜென்டினா ரசிகை ஒருவரும் தான் அணிந்திருந்த மேலாடையை கழட்டி சுற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், அந்த பெண்ணை கத்தார் அரசு கைதுசெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்தார் தீவிர மதக்கட்டுப்பாடுகளை பின்பற்றும் நாடு என்பதால் அங்கு பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது.

உலகக்கோப்பை காரணமாக சில கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு தோளில் இருந்து முழங்கால் வரை ஆடை அணிந்திருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை கத்தார் அரசு விதித்தது. மேலும், கால்பந்து காண வரும் ரசிகர்கள் , வெளிநாட்டு பார்வையாளர்கள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.

இதன் காரணமாக அந்த பெண் விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்பட்டாலும் இது தொடர்பாக கத்தார் அரசு இன்னும் எந்த அதிகாரபூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை. வெற்றிக்களிப்பில் அந்த பெண் அவ்வாறு செய்ததால் அவரை மன்னிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறிவரும் நிலையில், கத்தார் அரசும் இந்த விவகாரத்தை மௌனமாக கடந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: கழக ஆட்சியில் முதன்மையாக திகழும் தமிழ்நாடு.. தமிழினத்தை வாழ்விக்கும் சொல்தான் ’திராவிட மாடல்’.. முரசொலி !