Sports

உலகக்கோப்பையில் மூன்றாம் இடம் பிடித்த குரோஷியா.. FIFA வழங்கிய பரிசுத்தொகை என்ன தெரியுமா ?

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்றுடன் 16 அணிகள் வெளியேறிய நிலையில், ‘ரவுண்டு ஆப் 16’ மற்றும் காலிறுதியுடன் பிரேசில், போர்ச்சுகல், இங்கிலாந்து, நெதர்லாந்து உள்பட பல முன்னணி அணிகள் வெளியேறிவிட்டன.

நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும், முதல் முறை சாம்பியன் கனவில் குரோஷியா, மொராக்கோ அணிகள் அரையிறுதியில் களம் இறங்கின. முதல் அரையிறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதேபோல பல முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டி வரை முன்னேறிய மொரோக்கோ அணியும் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியின் அரையிறுதியில் மோதின. இதில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் மொரோக்கோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் அரையிறுதியில் தோல்வியைத் தழுவிய குரோஷியா -மொரோக்கோ அணிகள் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் நேற்று மோதின. கலீபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் 7-வது நிமிடத்திலேயே குரேஷியா அணி வீரர் ஜோஸ்கோ வார்டியோல் தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். இதற்கு பதிலடியாக மொரோக்கோ அணி வீரர் அஷ்ரப் டேரி ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் குரேஷியா அணி வீரர் மிஸ்லாவ் ஓர்சிக் தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இதன்முலம் ஆட்டத்தின் முதல் பாதியில் குரேஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. .

பின்னர் இரண்டாவது பாதியில் இரு அணிகளுக்கும் இடையே அனல் பறந்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோ அணியினர் கடுமையாக போராடியும் கோல் அடிக்கும் வாய்ப்பை இழந்தனர். பின்னர் கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் கோல் எதுவும் அடிக்காததால் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது இடம் பிடித்தது.

மூன்றாவது இடம் பிடித்த குரோஷியாவுக்கு ரூ.220 கோடி பரிசுத் தொகையும், நான்காவது இடம் பிடித்த மொராக்கோ அணிக்கு ரூ. 204 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் குரேஷியா இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து இரண்டாவது இடம் பிடித்த நிலையில் தற்போது மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இதேபோல், நடப்பு உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி வரை முன்னேறிய முதல் ஆப்ரிக்க அணி என்ற வரலாற்றை படைத்து மொராக்கோ அணி சாதனை படைத்துள்ளது.

Also Read: இது டெஸ்ட் போட்டியா ? T20 போட்டியா ? - ரஞ்சி கோப்பையில் ஹைதராபாத் அணியை நொறுக்கிய தமிழ்நாடு !