Sports

சரித்திரம் படைத்த மொரோக்கோ அணி.. பழைய பாணியில் ஆடி தொடரில் இருந்து வெளியேறிய முன்னாள் சாம்பியன் ஸ்பெயின்!

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ரவுண்டு ஆப்ஃ 16 சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில் ஆகிய அணிகள் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறிய நிலையில், நேற்று இறுதி கட்ட ரவுண்டு ஆப்ஃ 16 சுற்று போட்டி நடைபெற்றது.

முதல் போட்டியில் 2010ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற வலுவான ஸ்பெயின் அணியும், இந்த தொடரில் இதுவரை தோல்வியே தழுவாத மொரோக்கா அணியும் மோதின. இதில் ஆரம்பத்தில் இருந்தே பந்து ஸ்பெயின் அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. ஆனால் என்ன அப்டித்தான் இறுதிவரை இருந்தது.

ஸ்பெயின் வீரர்கள் தங்களுக்குள்ளேயே பந்தை தொடர்ந்து பாஸ் செய்துகொண்டு இருந்தார்களே தவிர கோல் அடிக்க அவர்கள் முற்படவே இல்லை. அவ்வப்போது மொரோக்கா அணிதான் கோல் அடிக்க முயற்சி செய்தது. முதல் பாதி முழுக்க இப்படியே சென்ற நிலையில் இரண்டாம் பாதி இதைவிட மோசமாக சென்றது.

ஆட்டம் முடிய சிறிது நேரமே இருந்த நிலையில்தான் ஸ்பெயின் ஒரு நல்ல கோல் முயற்சியை செய்தது. ப்ரீ கிக் வாய்ப்பு கோலாகும் என் நினைத்த நிலையில் அது சற்று தவறியது. அதனைத் தொடர்ந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் மொரோக்கோ அணிதான் அவ்வப்போது சில வாய்ப்புகளை உருவாக்கியதே தவிர ஸ்பெயின் அணி தங்களுக்குள்தான் தொடர்ந்து பாஸ் செய்துவந்தது.

இறுதியில் கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், பெனால்டி ஷாட் அவுட்க்கு சென்றது. இதில் ஸ்பெயின் தனது முதல் 3 வாய்ப்பையும் வீணடித்த நிலையில், மொரோக்கா அணி தனது 4 வாய்ப்பில் 3 கோல் அடித்து 3-0 என்ற கணக்கில் முன்னாள் சாம்பியனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

இதன்மூலம் உலகக்கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறிய நான்காவது ஆப்ரிக்க அணி என்ற பெருமையை மோரோக்கோ பெற்றது. ஸ்பெயின் அணி தங்களுக்குள்ளே பாஸ் செய்யும் டிக்கி டாகா ஸ்டைலில் ஆடித்தான் 2010-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. ஆனால் அப்போது அந்த அணியில் இனியெஸ்டா, சேவி போன்ற தரமான நடுகள வீரர்களும் எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் கோல் அடிக்கும் வில்லா, பெர்னாண்டஸ் ஆகிய வீரர்கள் இருந்தனர்.

ஆனால் அவர்கள் ஓய்வு பெற்றபின்னர் தொடர்ந்து ஸ்பெயின் அணி அதே டிக்கி டாகா பாணியில் ஆடினாலும் அந்த அணியில் சிறந்த ஸ்ட்ரைக்கர் இல்லாததால் கிடைத்த வாய்ப்பை கோலாக்க முடியாமல் தவித்து வருகிறது. அதனால்தான் 77 % நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தும் அந்த அணியால் ஒரு நல்ல வாய்ப்பை கூட உருவாக்கமுடியவில்லை. மேலும், ஸ்பெயின் அணியால் இறுதிவரை மொரோக்கோவின் தடுப்பு அரணை உடைக்கமுடியவில்லை. அந்த அளவு தடுப்பாட்டத்தில் அந்த அணி சிறப்பாக இருந்ததே அந்த அணி காலிறுதிக்கு முன்னேற உதவியுள்ளது.

Also Read: "இந்திய அணியில் உயர்சாதியினர்தான் இருக்கிறார்கள்.. அங்கு இடஒதுக்கீடு வேண்டும்" -பிரபல நடிகர் கருத்து !