Sports
"இந்திய அணியில் உயர்சாதியினர்தான் இருக்கிறார்கள்.. அங்கு இடஒதுக்கீடு வேண்டும்" -பிரபல நடிகர் கருத்து !
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோசமாக தோல்வியடைந்தது. இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதன் எதிரொலியாக, இந்திய அணியைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவைக் கூண்டோடு கலைத்து பிசிசிஐ அதிரடி காட்டியது. ஆனால் அடுத்து நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் சாம்சனுக்கு அணியில் இடம்மறுக்கப்பட்டது. அந்த தொடரில் இரண்டாம் நிலை அணியே களமிறங்கிய நிலையில் அதில் கூட முக்கிய வீரரான சாம்சனுக்கு இடம் கொடுக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியது.
இதன் காரணமாக இந்திய அணியில் வீரர்கள் தேர்வு செய்வதில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவதாகத் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்த நிலையில் #Casteist_BCCI இணையத்தில் வைரலாகியது. அதில் கருத்து பதிவிட்ட ரசிகர்கள் நீண்ட காலமாக இந்திய அணியில் சாதி பாகுபாடு நிலவுவதாகவும், இதனால் திறமை இருக்கும் வீரர்கள் கூட அணியில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியே அனுப்பப்படுகிறார்கள் என்றும் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், கர்நாடக நடிகர் சேத்தன் குமார், இந்திய கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக பேசிய அவர் "இந்திய அணியில் உள்ள வீரர்களில் 70 சதவீதம் பேர் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். சிறப்பாக ஆடும் பிற சமூக வீரர்களுக்கு அணியில் இடம் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. இடஒதுக்கீடு மூலம் இந்திய அணிக்கு பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டால் அது சிறந்த அணியாக இருக்கும்.
கல்வி, வேலை மற்றும் அரசியலில் தற்போது இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை கிரிக்கெட்டிலும் அமல்படுத்த வேண்டும். உதாரணமாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் குறைந்தது ஆறு கறுப்பின வீரர்களாவது இருக்க வேண்டும் என்பது விதி. அவர்களில் இருவர் கறுப்பின ஆப்பிரிக்கர்களாக இருக்க வேண்டும். அணி தேர்வுக்கும் இதே போன்ற விதியை இந்தியாவிலும் கொண்டு வர வேண்டும்" என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்தை பல்வேறு தரப்பினர் வரவேற்று வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!